Sunday, October 2, 2016

How Lanka

பறி போகின்றது நிலாவரைக்கிணறு


தமிழ் மக்களின் பூர்வீக மரபுரிமைச் சொத்துகளில் ஒன்றாகிய வலிகாமம் கிழக்கு பிரதேசசபைக்குட்பட்ட புத்தூர் நிலாவரைக்கிணறு, சுற்றுலாப்பயணிகளின் தரிசிப்புக்குரிய தவிர்க்க முடியாத விருப்பத்துக்குரிய இடத்தெரிவாக மாறிவிட்டது.

யாழ்ப்பாணத்துக்கு பயணம் போனால் கட்டாயம் நிலாவரைக்கிணற்றை பார்த்துவிட்டுத் திரும்ப வேண்டும் என்று துடிப்பவர்கள் பலர். இன்றும் கூட அந்த வாய்ப்புக் கிட்டாமல் தவிப்பவர்கள் பலர்.

தம் வாழ்நாளில் சுற்றுலா சென்ற இடங்களை நினைவு மீட்டும் போது அந்தப் பட்டியலில் நிலாவரைக்கிணறும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும். இதற்கு காரணமே இன்றும் கூட மர்மம் துலக்கப்படாத ஆச்சரியங்களை நிலாவரைக்கிணறு கொண்டுள்ளமை தான்.

இத்தகைய அருமை பெருமைகளைக் கொண்டுள்ள நிலாவரைக்கிணறு, குறைவில்லாமல் நாளாந்தம் நிறைந்து வழியும் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் மேலும் மேலும் தனது அருமை பெருமைகளை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றது. செவி வழிக்கதைகளை கேட்டும், நேரில் பார்வையிட்டவர்களின் அநுபவ பகிர்வுகளை கேட்டும் படையெடுக்கும் பயணிகளினாலேயே நிலாவரைக்கிணற்றுக்கு இது சாத்தியமாயிற்று.


இப்படி சுயமாகவே தனது அருமை பெருமைகளை நிலாவரைக்கிணறு தக்கவைத்துக்கொண்டுள்ளதே தவிர, அதன் அருமை பெருமைகளை உலகம் முழுவதும் பரப்பச்செய்ய வடக்கு மாகாணசபையோ, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையோ, தொல்பொருட்கள் ஆராய்ச்சி பாதுகாப்பு திணைக்களமோ உருப்படியான எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று சமுக ஆர்வலர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
அரச மரத்துக்கு கீழ் அவசர அவசரமாக நேற்று முளைத்த புத்தர் சிலைக்கு கூட பல நூற்றாண்டு காலச்சிலை என்று சித்திரித்து மும்மொழிகளிலும் தொன்மை குறிப்புகள் எழுதி காட்சிப்படுத்தப்படும் நிலையில், இன்றுவரை நிலாவரைக்கிணற்றின் தொன்மையை விளக்கும் எத்தகைய வரலாற்றுக்குறிப்புகளும் அங்கு வருகை தரும் பயணிகளின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவில்லை.

வருகை தரும் பயணிகள் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்து, ‘இங்கு என்ன விசேசம்?’ என்று முகத்தை கேள்விக்குறியாய் சுளித்துக்கொண்டு முழிக்கின்றனர். தொன்மைக்குறிப்பை படித்து கண் இமைகளை மேலே சொருகி பிரமித்துப்போக வேண்டிய சுற்றுலா பயணிகள், மாறாக பேந்த பேந்த முழிப்பதும், அசால்ட்டாக கடந்து போவதும் உயிரின் ஆழம் வரை இறங்கி சுள் என்று வலிக்கிறது.


மேலும் இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் குடிதண்ணீர் வெற்றுப்போத்தல்கள், பிளாஸ்டிக் – பொலித்தீன் பைகளை நிலாவரைக்கிணற்றுக்குள் வீசிவிட்டுச் சென்றுள்ளதையும், கிணற்றுச்சூழல் அசுத்தமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. இதனை தடுப்பதற்கும், சூழலை பாதுகாப்பதற்கும் எத்தகைய சூழலியல் அறிவும் – சமுக அக்கறையும் இன்றி கமுக்கமாக இருக்கின்றது தமிழர் அரசு என்று பீற்றும் வடக்கு மாகாணசபை.

உயிர்ப்பலி எடுக்கத் துடிக்கும் நிலாவரைக்கிணறு

நிலாவரைக்கிணற்றை அருகில் சென்று பார்வையிடத்தக்கவாறு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆர்வக்கோளாறில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இறங்கிச்சென்று கிணற்றின் அருகாக நின்று ஒளிப்படங்கள் எடுத்துக்கொள்வதையும் அவதானிக்க முடிகின்றது.

ஆனால் அவ்விடத்தில் எவ்வித பாதுகாப்பு தடுப்பணைகளும் இடப்படவில்லை. நிலைதடுமாறி நீரில் விழுந்தால் உயிர் இறப்புகளும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளன. நிச்சயம் இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து எல்லோரையும் அச்சம்பவம் சோகத்தில் ஆழ்த்தும் என்பதை மட்டும் நிதர்சனமாக உணர முடிகின்றது.

சம்பவம் நிகழ்ந்த பின்னர் கொய்யோ… முறையோ… என்று ஒப்பாரி வைப்பதை விடுத்துவிட்டு, வரும் முன்னர் காப்பது தானே புத்திசாதுரியமான செயற்பாடாகும். சம்பந்தப்பட்டவர்களின் புத்தியில் இது (உ)தைக்குமா?