மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கவும் அவர்களுக்கான தொழில் தகைமையினைப் பெற்றுக்கொடுக்கவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவருவதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் என்.நைரூஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி ஏற்பாடுசெய்யப்பட்ட மாபெரும் தொழில்சந்தை நேற்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த தொழில் சந்தையின்போது தொழில் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில்பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில் வழிகாட்டி நிறுவனங்கள் என இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குகொண்டன.
மேலும் குறித்த தொழிற்சந்தையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து 400க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் வருகைதந்து தமது பதிவுகளை மேற்கொண்டனர்.
வருடாந்தம் மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவருகின்றன.