Monday, December 12, 2016

How Lanka

சென்னையை நோக்கி வாயை நீட்டுகிறது வர்தா புயல்


சென்னைக்கு வடகிழக்கே 75.கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் மணிக்கு 13கி.மீ வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இன்று பிற்பகல் புயலானது தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகத்தின் கடலோர பகுதியில், சென்னைக்கு மிக அருகே கரையை கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வர்தா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த 3 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்குமாறும் அல்லது ஊழியர்களை வீட்டிலிருந்த படியே பணிபுரிய வைக்குமாறும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அத்தோடு புயலின் விளைவாக சென்னை உள்ளிட்ட தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகப்பகுதிகளில், கன மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இந்த புயல் எச்சரிக்கை தொடர்பான அவசர கூட்டம் ஒன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தின் பின்னர் நிலைமையை கண்காணிக்க சிரேஷ்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பலத்த காற்று வீசும் சமயங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் எனவும், நிலைமை மோசமடையும் சந்தர்ப்பத்தில் அதை சமாளிக்கும் பொருட்டு மின்துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தடைப்படும் என்பதால், பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் மேல் நிலைத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தயாராக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தங்குமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிவேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, தீயணைப்பு படையினர் உள்ளிட்ட பயிற்சி பெற்ற 1300 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வர்தா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்திலுள்ள துறைமுகங்களுக்கு 11 ஆவது முறையாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மிக அபாயமான எச்சரிக்கையாக 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை, எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களுக்கே இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது