Wednesday, September 13, 2017

How Lanka

சிங்கப்பூரில் முதல் முறையாக பெண் ஜனாதிபதி

சிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதியாக ஹலிமா யாகோப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை அவர் தனதாக்கிக்கொள்ளும் நிலையில், வாக்கெடுப்பின்றி ஜனநாயகத்திற்கு புறம்பாக தெரிவு செய்யப்பட்டதாக அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

முஸ்லிம் மலாய் பிரிவைச் சேர்ந்த ஹலிமா யாகோப், பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும் செயற்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள், உரிய தகுதிகளைப் பெற்றிருக்காத காரணத்தால், தேர்தல் நடத்தப்படாமலே ஹலிமா யாகோப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் ஆறாண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது.

தற்போதைய அதிபர் டோனி டானின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது.

இதையொட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.

இந்த முறை நடைபெறும் தேர்தலில் அந்நாட்டின் சிறுபான்மையினரான மலாய் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் போட்டியிடலாம் என்ற விதிமுறை இருந்த நிலையில், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாகோப் தான் போட்டியிடுவதாக அறிவிப்பு விடுத்தார்.

ஹலிமா யாகோப்பை எதிர்த்துப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், ஹலிமா யாகோப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்