Sunday, September 17, 2017

How Lanka

பில்லியன் கணக்கில் செலவிட்டு அவசரமாக அதிவேக வீதி

 கல்விக்காக கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 77 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பல மாணவர்கள் உரிய முறையில் கல்வியைப் பெறுவதற்கு முடியாமல் தவிக்கும் நேரத்தில் பில்லியன் கணக்கில் செலவிட்டு அவசரமாக அதிவேக வீதியொன்று நிர்மாணிக்கப்படுகிறது.

அதிவேக வீதி தொடர்பிலான மற்றுமொரு தகவலை இன்று நாம் வெளிக்கொணர்கின்றோம்…

கஹதுடுவையில் இருந்து ஹொரனை ஊடாக பெல்மடுல்ல வரையான 73 .9 கிலோமீற்றர் தூரம் கொண்ட ருவன்புர அதிவேக வீதியை அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தயாராகின்றது.

இந்த திட்டத்திற்காக 275 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

எனினும் இந்தத் திட்டத்திற்கு அவசியமான கடனைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடு இன்னும் நிறைவு பெறவில்லை.

இது இவ்வாறு இருக்கும் போது, சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை, பொருளாதார சாத்தியக்கூற்று ஆய்வு என்பவற்றைப் பெற முன்னர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, காணிகளை சுவீகரிக்கும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக இன்று சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

காணி சுவீகரிப்பு சட்டத்தின் 38 ( அ) பிரிவின் கீழ் அவசர தேவைக்காக இந்தக் காணிகள் சுவீகரிக்கப்படுவதாக இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசரமாக சுவீகரிக்கும் காணிகளுக்காக இழப்பீடு வழங்க இன்னும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவில்லையெனவும் சன்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

இதேவேளை வீதி அபிவிருத்தி அதிகார சபை இந்த திட்டத்தின் சாத்தியக் கூற்று அறிக்கைக்கான ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளும் நிறுவனத்திற்கு 134 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளது.

சன்டே டைம்ஸ் வௌியிட்டுள்ள தகவல்களின்படி, சாத்தியக் கூற்று அறிக்கைக்காக, மகநெகும கன்ஸல்டன்ஸி என்ட் பிரொஜெக்ட் மெனேஜ்மென்ட் சேர்விஸ் நிறுவனம் ஊடாக ஸ்கில் இன்டர்நெஷனல் என்ற நிறுவனம் துணை ஒப்பந்தம் பெற்றுள்ளது.

2014 ஆம் ஆண்டு இந்த செயற்பாடு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

எனினும் வழங்கப்பட்ட காலம் நிறைவடைந்துள்ளமையினால் தாமதக் கட்டணத்தைக் கூட பெற்றுக் கொள்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை செயற்படவில்லையென இந்த செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை அவசரமாக இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு முயற்சி செய்வதன் முலம் அனைத்து சட்டங்களையும் மீறும் நிலமை உருவாகியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரியொருவர் குறிப்பிட்டதாக சன்டே டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டது.

ருவன்புர அதிவேக வீதி மற்றும் அவசரமாக மேற்கொள்ளப்படும் மத்திய அதிவேக வீதி என்பன, மக்களின் பணம் வீண் விரயமாக்கப்படும் திட்டங்களாக மாறியுள்ளன.

மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகளின் போது, சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை கருத்திற்கொள்ளாமல் செயற்படுகின்றமை மற்றும் மக்களின் காணிகளை சுவீகரித்தல் மீள்குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகளின் வினைத்திறன் இன்மையால், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் என்பன இலகு நிபந்தனை அடிப்படையில் வழங்கவிருந்த கடனை நிராகரித்துள்ளன.

இதன் விளைவாக வீதியின் முதற்கட்டத்திற்கு சீனாவின் எக்சிம் வங்கியிலிருந்தும் இரண்டாம் கட்டத்திற்கு இரண்டு உள்நாட்டு வங்கிகளிலிருந்தும் மூன்றாம் கட்டத்திற்கு ஜப்பானின் டோக்கியோ மிக் ஷுபிஷி வங்கியிலிருந்தும் அதிக வட்டி வீதத்தில் கடும் நிபந்தனைகளுடன் கூடிய கடனைப் பெற்றுக் கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.

வினைத்திறனின்றி, அவசரகமாக மேற்கொள்ளப்படும் அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக செலவிடப்படும்
தொகையை இறுதியில் நாட்டு மக்களே சுமக்க வேண்டியேற்படும்.

இவைகுறித்து தகவல்களை வௌியிடும்போது, பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல ஊடகங்களை கடிந்துகொண்டு, ஊடகங்கள் தொடர்பிலும் வௌிப்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சரே!!!

இவை மக்களின் பணம் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு நாம் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருக்கும் போது, மேற்கொள்ளப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?

இலகு நிவாரணக் கடன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின்போது, காணி சுவீகரிப்பு
மற்றும் மக்களை மீள்குடியேற்றிய விடயங்கள் மற்றும் இந்தத் திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.

அவ்வாறிருக்கும் போது, பணத்தின் மீதுள்ள பேராசையால் இலாபமிகு மற்றும் செலவு குறைந்த முறையை தவிர்த்து அதிக செலவு செய்து உரிய திட்டமின்றி அதிவேக வீதியை நிர்மாணிப்பதனால், இறுதியில் மக்களே சிரமத்திற்குள்ளாகுவர்.