Wednesday, September 27, 2017

How Lanka

வித்தியாவின் தாய் இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்துள்ளார்


என்னை போல எந்தவொரு தாயும் இனி அழக்கூடாது என புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் சிவலேகநாதன் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்த வித்தியா தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றவாளிகள் ஏழு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “என் மகள் வித்தியாவுக்காக கஷ்டப்பட்டவர்கள், அடிவாங்கியவர்கள் அனைவருக்கும் கண்ணீருடன் வித்தியா சார்பில் நன்றி கூறுகிறேன்.


நீதிபதிகள் மூவருக்கும் நன்றிகள். விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்றி. சட்டத்தரணிகளுக்கு நன்றிகள். கடந்த இரண்டு ஆண்டுகளாக வித்தியாவுக்காக குரல் கொடுத்த ஊடகங்கள் அனைத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


எங்களுக்காக குரல் கொடுத்த அனைவரும் இரு கரம் கூப்பி நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். என்னை போல ஒரு தாய் இனி யாரும் அழக்கூடாது.

வித்தியாவுக்கு நடந்த கொடுமை போன்றும் இனி யாருக்கும் நடக்க கூடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் இன்று 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மயங்கி வீழ்ந்த வித்தியாவின் தாய்
வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ள நிலையில் வித்தியாவின் தாய் மன்றில் மயங்கி வீழ்ந்துள்ளார்.

வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி, 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வித்தியாவின் குடும்பத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவை இழப்பீடாக செலுத்துமாறு நீதிப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திறந்த நீதிமன்றில் இருந்த வித்தியாவின் தாய் மயங்கி வீழ்ந்துள்ளார்.

இந்த வழக்கில் 1ஆம் மற்றும் 7ஆம் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக நீதிபதி மா.இளஞ்செழியன் கண்டனம்


வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ்குமார் விடயத்தில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நடந்து கொண்ட விதம் தொடர்பாக நீதிபதி மா.இளஞ்செழியன் விமர்சனம் செய்துள்ளார்.

வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்பட்டவுள்ளது.

இந்நிலையில், தீர்ப்பாயத்தின் நீதிபதி மா.இளஞ்செழியன் 345 பக்கங்களை கொண்ட தனது தனிப்பட்ட தீர்ப்பின் சுருக்கத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளார்.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நடவடிக்கை சுவிஸ்குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை தப்பிக்க வைக்கும் முதலாவது நடவடிக்கை.

பொதுமக்கள் சுவிஸ்குமாரை கட்டி வைத்து தாக்கிய போது அங்கு சென்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கட்டை அவிழ்த்து விடுமாறு பொது மக்களை கோரியுள்ளார். அது நல்ல விடயம்.

ஆனால், சந்தேகநபரை பொலிஸாரிடம் ஒப்படைக்கவோ, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவோ இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை சந்தேகநபரான மகாலிங்கம் சசிக்குமார் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

பொதுமக்களிடம் சசிக்குமாரை அவிழ்த்து விடுமாறு கூறிய விஜயகலா மகேஸ்வரன், சசிக்குமாரின் உறவினர்கள் வந்து அவரை அழைத்துச் செல்லும் வரை சுமார் 2 மணி நேரம் இரவு 11 மணியில் இருந்து 1 மணி வரை வீதியில் காத்திருந்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரின் இந்த நடவடிக்கை சந்தேகநபராக ம.சசிகுமாரை தப்பிக்க வைக்கும் முதலாவது நடவடிக்கை என நீதிபதி இளங்செழியன் கூறியுள்ளார்.