அதிக மழைக் காரணமாக களு, நில்வலா மற்றும் கிங் ஆறுகளின் நீர்மட்டம் அபாய நிலையை அடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை , களனி ஆறும் பெருக்கெடுத்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டள்ளார்.
ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக தாழ்நிலப்பகுதியில் வாழ்வோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறும் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நிலவும் அதிக மழையுடனான வானிலையால் இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்ளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு, கற்பாறைகள் சரிந்து வீழ்தல் என்பன தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
கொழும்பிலும் கடும் காற்றுடன் மழை
நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் கொழும்பின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
அந்த வகையில், இன்று காலை முதல் கொழும்பின் குறிப்பிட்ட சில பகுதிகளில் தொடர் மழை வீழ்ச்சி பதிவாகி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.