Sunday, October 22, 2017

How Lanka

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து சட்டவிரோத மணல் அகழ்வு - மக்கள் குற்றச்சாட்டு


மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பொன்டுகல்சேனை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதனால் இயற்கை வளம் அழிந்து செல்வதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

அனுமதிப் பத்திரம் பெற்று மணல் அகழ்வதாக இருந்தால் மணல் அகழப்படும் இடத்தில் குறித்த நபரின் பெயரை காட்சிப்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.

எனினும் இந்தப் பகுதியில் எம்மால் அதனை அவதானிக்க முடியவில்லை.

மணல் அகழ்விற்கு புதிதாக அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளவர்கள் பெயர்கள் காட்சிப்படுத்தப்படவில்லை எனவும் மணல் அகழ்வு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் கிராண் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.


இதேவேளை மட்டக்களப்பு வாகனேரி முள்ளிவட்டுவான் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ்பெஸ்ட் பிராந்திய செய்தியாளருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

மணல் அகழ்வு நிலையத்தின் உரிமையாளர் ஹனிபா ஜி.எஸ், மொஹமட் ஸ்மைய்ல் மற்றும் அப்துல் காதர் ஆகியோரே தமக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

மட்டக்களப்பு வாகனேரி முள்ளிவட்டுவான் ஆற்றுப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர்களுக்கு அனுமதிப்பத்திரம் உள்ளதா என்பது தொடர்பில் நாம் இன்றும் பிரதேச செயலாளரிடம் வினவினோம்.

ஹனீபா என்ற நபருக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை எனவும் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்கள் தொடர்பில் நாளை தகவல்களை வழங்குவதாக கிராண் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.

பிரதேசத்தில் மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கியுள்ளவர்களின் பெயர் விபரத்தை நாம் தொடர்ந்தும் கேட்ட போதும் அதனை ஆராய்ந்து கூறுவதாக கிராண் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் பல தடவைகள் கூறியிருந்தார்.

இந்தப் பின்புலத்தில் நாளையாவது அந்த தகவல் கிடைக்குமா?