அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிக்கவரட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை இன்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் தவறிழைத்த காரணத்தினால், 2015ம் ஆண்டில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து கொண்டே அதே பிழைகளையும் அதே மோசடிகளையும் செய்வார்களாயின் மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள்.
சரியான திட்டமொன்றை முன்னெடுக்கும் நோக்கிலேயே ஊழல் மோசடி மிக்க அரசாங்கத்தை துரத்தி புதிய அரசாங்கத்தை மக்கள் அமைத்தனர்.
மக்கள் தேவைகளை புரிந்து கொண்டு சரியான பாதையில் செல்வதற்கு அனைவரும் ஆயத்தமாக வேண்டும்.பிரிந்து செல்வது இலகுவானது, எனினும் சேர்ந்திருப்பது சிரமமானதாகும்.
அரசியல் சிறுபிள்ளைகள் போன்று செயற்பட்டாது அனுபவம் மிக்க தேர்ந்த அரசியல்வாதிகளாக செயற்பட வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.
அரசியல் அதிகாரம் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படாது நாட்டையும் மக்களையும் நேசிக்கும் அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும்.
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் போது அதற்கு எதிராக தீர்மானங்களை எடுக்கும் போது அதற்கு எதிராக என் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் அனைத்து பதவிகளையும் துறந்து மக்களுடன் இணைந்த போராட நேரிடும்.
யார் என்ன சொன்னாலும் ஐம்பதாண்டு அரசியல் வாழ்க்கை தூய்மையான நேர்மையான ஊழல் மோசடிகளற்றதாகும்.
இந்த பழுத்த அரசியல் அனுபவத்தின் ஊடாக நான் எப்போதும் பொறுமையுடன் செயற்படுவேன், நான் அரசியல் பயிலுனர் கிடையாது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு சுதந்திரக் கட்சிக்கும் அவசியமில்லை.
19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு 47 ஆசனங்களே காணப்பட்டன,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புக்களுக்கு 142 ஆசனங்கள் காணப்பட்டன என்பதனை நினைவூட்ட விரும்புகின்றேன்.
தேர்தல் வெற்றிகளுக்கு மட்டும் சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தக் கூடாது நல்ல அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க கட்சியை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.