Thursday, January 18, 2018

How Lanka

தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா

செஞ்சூரியனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.

கடந்த 13ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவின் செஞ்சூரியனில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி துடுப்பாட்டத்தை துவங்கியது.


மார்கம் 94 ஓட்டங்களும், ஆம்லா 82 ஓட்டங்களும், டூபிளிஸிஸ் 63 ஓட்டங்களும் குவிக்க தென் ஆப்பிரிக்கா 335 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 307 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோஹ்லி 153 ஓட்டங்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மோர்னே மோர்கல் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இதன்மூலம் 28 ஒட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்பிரிக்கா, 258 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 80 ஓட்டங்களும், எல்கர் 61 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளும், பும்ரா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து, இந்திய அணிக்கு 287 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 26 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள், அடுத்தடுத்து சரியத் தொடங்கின.

ரோஹித் சர்மா மட்டும் 47 ஓட்டங்கள் குவிக்க, மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், இந்திய அணி 50.2 ஓவர்கள் 151 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.


இதன்மூலம், 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

அந்த அணியில் அபாரமாக பந்து வீசிய லங்கிஸனி நிடி 39 ஒட்டங்கள் விட்டுகொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும், இந்திய வீரர் புஜாரா ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் இருமுறை ஒரே டெஸ்டில் ரன் அவுட் ஆன இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.