Sunday, February 4, 2018

How Lanka

கொழும்பில் உள்ள கட்டடங்கள் தாழிறங்கும் ஆபத்து - மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

கொழும்பு நகரில் பாரிய ஆபத்துக்கள் ஏற்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஒட்டுமொத்த இலங்கையர்களின் கவனமும் கொழும்பு நகரம் மீது பதிந்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு நகரில் எவ்வாறான ஆபத்துக்கள் ஏற்படும் என சர்வதேச புகழ்பெற்ற பொறியியலாளர் ஜீ.ஜீ.கருணாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவின் நிதி உதவியின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரத்தினால் கொழும்பில் உள்ள கட்டடங்கள் தாழிறங்கும். சில பகுதிகளில் ஆழமான விரிசல் ஏற்படகூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த திட்டம் காரணமாக கடல் நீர் அதிகரிக்கும் என்பதனால் கொழும்பில் தற்போது ஏற்படும் வெள்ள பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாய நிலை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்படி இல்லை என்றால் உமா ஓய திட்டம் காரணமாக பண்டாரவளை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்தை விடவும் பாரிய ஆபத்து ஒன்று கொழும்பில் ஏற்பட கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற பொறியியலாளர் நிறுவனம் ஒன்றில் உரையாற்றிய ஜீ.ஜீ.கருணாரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பில் அவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஜனாதிபதி மாளிகை, முதலீட்டு சபையின் கடற்படை தலைமையகம், இலங்கை வங்கியின் பிரதான கிளை, காகில்ஸ் கட்டடம், பழைய நாடாளுமன்ற கட்டடம், வெளிநாட்டு அமைச்சு தாழிறங்க கூடிய கட்டடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

துறைமுக நகர நிர்மாணிப்பு காரணமாக கொழும்பு நகரத்திற்கு அருகில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க கூடும். மிகவும் அழமற்ற அத்திவாரத்தில் உள்ள கட்டடங்கள் பலவீனமடைந்து தாங்கிக்கொள்ள முடியாத நிலைமைக்கு உள்ளாகி தாழிறங்க கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்த நிர்மாணிப்பு காரணமாக கொழும்பு நகரம் மக்கள் வாழ தகுதியற்ற நகரமாக மாறுவதற்கு பாரியளவிலான வாய்ப்புகள் உள்ளதென்பது அவரது கருத்தாகும்.

துறைமுக நகர திட்டத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள 421 பக்கங்களை கொண்டுள்ள சுற்று சூழல் அறிக்கையில், பழைய கட்டடங்களுக்கு அச்சறுத்தல் ஏற்படகூடும் என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதனை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.

இதனால் துறைமுக நகர நிர்மாணிப்பு நிறைவடையும் வரை காத்திருக்காமல் ஏற்பட கூடிய அவதானம் தொடர்பில் ஆராய்ந்து ஆபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, துறைமுக நகர திட்டம் காரணமாக கொழும்பு நகருக்கு பல பாதிப்புகள் உள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.