Friday, February 16, 2018

How Lanka

இந்தியா பாணியில் இலங்கையும் - கோடிக்கணக்கில் பணம் - அமைச்சர்கள் விலைக்கு வாங்கல்

ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பிரதமர் பதவியை பறிக்கும் நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை பலகோடி பேரத்துடன் மஹிந்த ராஜபக்ஷ அணியில் இணைத்துக் கொள்வதற்கான குதிரைபேரமொன்று இன்று முழுவதும் மும்முனைகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முக்கிய அமைச்சர் ஒருவரின் மகனான இளம் அரசியல்வாதியொருவரும், ஜனாதிபதிக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினரான பிக்கு ஒருவரும், அமைச்சுப் பதவி பறிக்கப்பட்ட சட்டவிற்பன்னரான கலாநிதி ஒருவரும் இந்த மும்முனை முயற்சிகளில் களம் இறங்கியிருந்தனர்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தலா 20 கோடி வரை பேரம் பேசப்பட்டுள்ள போதிலும் இந்த மும்முனை ஆபரேசன் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு ரீதியாக ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்க முடியாது என்றும் பிரதமர் தானாக பதவி விலகினால் மாத்திரமே புதிய பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்றும் சட்ட விற்பன்னர்கள் வழங்கியிருந்த வியாக்கியானமே மும்முனை ஆபரேசனின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

எனினும் அரசியல் அமைப்பு ரீதியாக ஜனாதிபதியினால் பிரதமரை பதவி நீக்கம் செய்யமுடியும் என்பதை விளக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ ஜனாதிபதி மைத்திரிக்கு விளக்கமளிக்கும் முயற்சியொன்றை தற்போது மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இதற்காக அவர் அரசியலமைப்பு கையேட்டையும் எடுத்துக் கொண்டு ஜனாதிபதியின் வாசஸ்தலத்துக்கு வருகை தந்துள்ளார்.

விஜேதாச ராஜபக்‌ஷவின் சட்ட வியாக்கியானத்தை அடுத்து தற்போது மீண்டும் சுதந்திரக் கட்சி வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பொன்று முளைவிடத் தொடங்கியுள்ளது.