Thursday, February 22, 2018

How Lanka

யாழில் லீசிங்கின் கொடூரம் - சொத்துடமைகளைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் கட்டளை

யாழ்ப்பாணத்திலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் லீசிங் அடிப்படையில் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்துவிட்டு நிலுவைக் கொடுப்பனவை செலுத்தத் தவறியவரின் உடமைகளைப் பறிமுதல் செய்ய கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள அந்த நபரின் வீட்டிலுள்ள உடமைகளைக் கணக்கிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளருக்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் எழுத்தாணைக் கட்டளை வழங்கியிருந்தது.

வர்த்தக மேல் நீதிமன்றின் எழுத்தாணைக் கட்டளையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றினார்.

யாழ்ப்பாணத்திலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் லீசிங் அடிப்படையில் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்த நபர், தவணைப் பணத்தைச் செலுத்தத் தவறியுள்ளார். அதனால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் பின்னரும் நிலுவைப் பணமாக 8 இலட்சம் ரூபாவை செலுத்துமாறு நிதி நிறுவனம் அந்த நபரிடம் கோரியுள்ளது.

அதற்கான அவகாசத்தை நிதி நிறுவனம் வழங்கியபோதும் அவர் அதனைச் செலுத்தத் தவறினார்.


நிதி நிறுவனத்தால் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் எழுத்தாணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதன் மீதான விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் எதிர் மனுதாரரின் சொத்துடமைகளைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் கட்டளை வழங்கியது.

அந்தக் கட்டளையை நிறைவேற்றுமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளருக்கு மன்று பணித்தது.

இந்த நிலையில் எழுத்தாணை மனுதாரரான நிதி நிறுவனம், யாழ்ப்பாணம் பொலிஸார், நீதிமன்ற உத்தியோகத்தர்களுடன், எதிர் மனுதாரர் வதியும் இல்லத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர், எழுத்தாணைக் கட்டளையை நிறைவேற்றினார்.

எதிர் மனுதாரரின் வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட தளபாடங்கள் கணக்கிடப்பட்டு நிதி நிறுவனத்துக்கு அறிக்கை வழங்கப்பட்டது. அவரிடம் தற்போதுள்ள தளபாடங்களின் பெறுமதி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் நிதி நிறுவனங்களில் லீசிங் மற்றும் கடன் பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.

அதிகரித்த வட்டி மற்றும் வருமான இழப்புக் காரணமாக கடன்களைத் திருப்பிச் செலுத்துவத்தில் பலர் இடர்பாடுகளைக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு எதிராக கொழும்பு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.