215 ஓட்டங்களை இலங்கைக்கு எதிராக எடுத்து வெற்றி பெற்றுள்ள வங்கதேச அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இலங்கையில் நடைபெற்று வரும் சுதந்திர தின கிண்ண டி20 தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதின.
முதலில் ஆடிய இலங்கை அணி 214 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய வங்கதேச அணி 19.4 ஓவர்களில் 215 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் சேசிங் செய்து வெற்றி பெற்ற 4வது பெரிய ஸ்கோர் இது என்ற புதிய மைல்கல்லை வங்கதேசம் எட்டியுள்ளது.
இதோடு வங்கதேசம் சேசிங் செய்து வெற்றி பெற்ற மிக பெரிய ஸ்கோர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு தொடரில் துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியால் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசம் வீழ்த்தியது.
இலங்கையில் இந்தியா, இலங்கை, வங்காளதேச அணிகளுக்கு இடையிலான நிதாஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியாவை இலங்கையும், 2-வது ஆட்டத்தில் வங்காள தேசத்தை இந்தியாவும் வீழ்த்தியிருந்தன.
இந்நிலையில், இலங்கை - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேச அணித் தலைவர் மெஹ்முதுல்லா பந்துவீச்சை தெரிவு செய்தார்.
இலங்கை அணியின் குணதிலகா, குசால் மெண்டிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
இலங்கை அணி 4.3 ஓவரில் 56 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது குணதிலகா 19 பந்தில் 26 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு குசால் மெண்டிஸ் உடன் குசால் பெரேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வங்காள தேசத்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. அணியின் ஸ்கோர் 141 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது.
குசால் மெண்டிஸ் 30 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷனகா ரன்ஏதும் எடுக்காமலும், சண்டில் 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.
குசால் பெரேரா 48 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 74 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் குவித்தது.
உபுல் தரங்கா 15 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 32 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
வங்காளதேசம் சார்பில் முஷ்தபிகுர் ரகுமான் 3 விக்கெட்டும், மகமதுல்லா 2 விக்கெட்டும், தஸ்கின் அகமது ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அதன்பின்னர், 215 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பாலும், லித்தன் தாசும் களமிறங்கினர்.
முதலில் இருந்தே அடித்து விளையாடியதால் அந்த அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்து வந்தது. அதிரடியாக ஆடிய லித்தன் தாஸ் 19 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரியுடன் 43 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார்.
அவரை தொடர்ந்து தமிம் இக்பால் 29 பந்துகளில் ஒரு சிக்சர், 6 பவுண்டரியுடன் 47 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் களமிறங்கிய முஷ்பிகுர் ரஹிம் பொறுப்புடன் விளையாடினார். அவர் 35 பந்துகளில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 72 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், வங்காளதேசம் அணி 19. 4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இலங்கை அணி தரப்பில் நுவன் பிரதீப் 2 விக்கெட்டும், துஷ்மந்த சமீரா, திசாரா பெராரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
முத்தரப்பு டி-20 தொடரின் அடுத்த போட்டி நாளை மறுதினம் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.