Tuesday, March 13, 2018

How Lanka

ரஷ்யாவிற்கு காலக்கெடு விதித்த பிரித்தானியா

பிரித்தானியாவில் வைத்து, முன்னாள் ரஷ்ய உளவாளி மீது மேற்கொள்ளப்பட்ட நச்சு தாக்குதலில் ரஷ்யாவிற்கு நேரடி தொடர்பு இருப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் 24 மணி நேரங்களுக்குள் பதில் வழங்க வேண்டும் எனவும் அவர் நேற்றைய தினம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் சாலிஸ்பரி நகரில் வைத்து முன்னாள் ரஷ்ய உளவாளி Sergei Skripal மற்றும் அவரது மகள் மீது நச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் கடந்த நான்காம் திகதி இடம்பெற்றிருந்தது. இதில் பாதிக்கப்பட்ட இருவரும் கவலைக்கிடமான முறையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் தெரசா மே தேசிய பாதுகாப்பு சபையை கூட்டி நேற்றைய தினம் ஆலோசனை நடத்தியிருந்தார். இதன் போது கருத்து தெரிவித்த அவர்,

“இந்த சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யா நேரடியாக இருந்திருக்க வேண்டும். அல்லது, பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் மீதான தனது கட்டுப்பாட்டை இழந்து பிறரின் கைகளுக்கு அது கிடைக்க அந்நாடு அனுமதித்திருக்க வேண்டும்” என கூறினார்.

ரஷ்யாவின் தலையீடு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரித்தானிய வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

எனவே, இந்த சம்பவம் குறித்து பதிலளிக்க ரஷ்ய தூதுவருக்கு இன்று நள்ளிரவு வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிரித்தானியாவின் குற்றச்சாட்டை ரஷ்யா முழுமையாக மறுத்துள்ளது. தாக்குதல் குறித்த கேள்விகளை ரஷ்ய ஜனாதிபதி நிராகரித்து விட்டார்.

மக்களுக்கு தேவையான நல்ல சூழ்நிலைகளை உருவாக்கும் விவசாய திட்டங்களில் முன்முரமாக இருக்கின்றோம். நீங்களோ சில துயரங்களை பற்றி பேசுகின்றீர்கள்.

முதலில் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை செய்யுங்கள். பின்னர் அது பற்றி பேசுகின்றோம் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் குறிப்பிட்டுள்ளார்.