Tuesday, April 10, 2018

How Lanka

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகும் கோத்தாபய ராஜபக்ச

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார் என தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, அதற்காக அமெரிக்க குடியுரிமையை கைவிட தயார் எனவும் கூறியுள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“அடுத்த ஜனாதிபதி தேர்தலில் என்னை வேட்பாளராக தெரிவு செய்வது குறித்து கொழும்பு அரசியலில் பேசப்படுகின்றது. இந்த விடயம் குறித்து யாரும் இதுவரையில் என்னை அணுகவில்லை.

அதுபற்றி முடிவு செய்வதற்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. இது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைப் பொறுத்த விடயம். மிகச் சிறந்த வேட்பாளர் என்று அவரேமுடிவு செய்வார்.

வெற்றி பெறக் கூடிய, பொருத்தமான வேட்பாளர் யார் என்பது அவருக்குத் தெரியும். மகிந்த ராஜபக்சவை விட, வேட்பாளராவதற்கு பொருத்தமானவர் வேறு எவரும் இல்லை.

மக்கள் ஆதரவையும், பிரபலத்தையும், தற்போதைய சூழ்நிலையில் தேவைப்படும் தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய ஆற்றலையும் அவர் கொண்டுள்ளார். அவர் அனுபவம் மிக்கவர்.

19வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தினால், துரதிஷ்டவசமாக அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாது. அவரது ஆதரவைப் பெற்ற எவரேனும் ஒருவரால் தான் வெற்றி பெற முடியும்.

எனினும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தன்னை வேட்பாளராகத் தெரிவு செய்தால் நான் போட்டியிடுவேன்.

அதற்காக முன்வருவேன். போட்டியிடுவதற்கான ஆற்றல் எனக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.