பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை கொழும்பு அரசியலில் பேசும் விடயமாக இருந்து வருகின்றது.
இந்நிலையில், குறித்த பிரேரணை நாளைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பிரேரணையை வெற்றியடைச் செய்ய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பு தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
அதேபோல பிரேரணையை தோற்கடிப்பதற்கு பிரதமர் தரப்பும் தீவிர அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக பல அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், கொழும்பு அரசியல் இன்று பெரும் பரபரப்பை அடைந்துள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அரசியல் கட்சிகள் இரவோடு இரவாக பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தன.
பேச்சுவார்த்தையின் முடிவில் பல அரசியல் கட்சிகள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளன.
அந்த வகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளன.
அத்துடன், அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பனவும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளனர்.
குறித்த கட்சிகள் அனைத்தும் பிரதமருடன் தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும், இதன் போது சில கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் தனித் தனியே உறுதி மொழி கடிதங்கள் வழங்கியுள்ளதை தொடர்ந்தே குறித்த அனைத்து தரப்பினர்களும் பிரதமருக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்கவும், பிரதமருக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார உள்ளிட்ட மூவர் பிரதமர் ரணிலுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரையிலும் (குறித்த செய்தி எழுதும் வரையில்) அவர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை என கொழும்பு அரசியல் தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், தற்போதைய நிலைவரப்படி பிரமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடையும் அதேநேரம், பிரதமரின் வெற்றி உறுதியாகியிருப்பதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.