Tuesday, April 3, 2018

How Lanka

உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையால் (WTBF) நடத்தப்படும் 6 வது உலகக்கிண்ணப் போட்டி

உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையால் (WTBF) நடத்தப்படும் 6ஆவது உலகக்கிண்ணப் போட்டி டென்மார்க்கில் நியூபோ நகரில் ஆரம்பமாகியுள்ளது.

விளையாட்டு ரீதியாக உலகத்தமிழர்களை ஒன்றிணைத்து குறித்த போட்டி நடத்தப்பட்டு வருகின்றதுடன், உலகப் பூப்பந்தாட்டப் பேரவையின் ஸ்தாபகரும் பேரவையின் தலைவருமாகிய கந்தையா சிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் ஆறாவது உலகக் கிண்ணச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டு பிரதிகளும் பிரதம மற்றும் சிறப்பு அதிதிகளுக்கும் பார்வையாளருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிகழ்வில் இலங்கை, கனடா அவுஸ்திரேலியா உட்பட 15 நாடுகள் பங்குபற்றும் 270 போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

இதேவேளை,போட்டியாளரைக் கொண்ட இவ் விளையாட்டில் 25 பிரிவுகள் கொண்டதோடு, பிரிவுகள் 11 வயதுக்குட்பட்டோரிலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோரும் பங்குபற்றும் வகையில் அமைந்துள்ளது. மூன்று மைதானங்களில் 18 திடல்களில் நடைபெறும் போட்டிகளின் இறுதியாட்டம் நாளை நிறைவுற்று பரிசில்கள் வழங்கப்படும்.


முதன் முதலில் (2013)சுவிற்சர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டி பின்னர் முறையே பிரான்சு (2014), இங்கிலாந்து ( 2015 ) யேர்மனி(2016 ), கனடா (2017 )என நடத்தப்பட்டு இம்முறை டென்மார்க்கில் நியுபோ நகரில் Nyborg hallen விளையாட்டு அரங்கத்தில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களோடு அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்நிகழ்வு தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உலகமே வியக்கும் வகையில் ஆறாவது வருடமாக நடைபெறும் இப் பிரமாண்டமான உலக க்கிண்ணப்போட்டியானது உலகில் உள்ள பல தமிழர்களை ஒருங்கிணைத்து ஐக்கியப்படுத்துவதோடு குறிப்பாக இளையோர் மத்தியில் ஒற்றுமையையும் விளையாடும் உணர்வையும் ஊட்டி அவரகளின் திறனையும் வளர்க்குமென நம்பப்படுகிறது. இவ்வுலக க்கிண்ணப்போட்டி அடுத்த ஆண்டு நோர்வே நாட்டில் நடைபெறும் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும், நியுபோ தமிழர் விளையாட்டுக்கழகத்தின் ஒத்துழைப்புடனும் நடத்தப்பட்ட போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக நியுபோ நகர விளையாட்டு மைதானப் பொறுப்பாளர் Keld Arentoft, சிறப்பு அதிதிகளாக உலகப்பூப்பந்தாட்டப் பேரவையின் ஆலோசகரும் தொழில்நுட்ப பொறுப்பாளருமாகிய Roman pechous மற்றும் நியூபோ தமிழர் விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் உறுப்பினர்கள், உலகப் பூப்பந்தாட்டப் பேரவையின் முக்கிய பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.