Thursday, May 3, 2018

How Lanka

பொது அமைப்புகளின் ஒற்றுமையிலேயே அந்தந்த பகுதியின் அபிவிருத்தி தங்கியுள்ளது - தவிசாளர் ஜெயகாந்தன்


வறிய மக்களின் தேவைகளை இனங்காண்பதுடன் அவற்றுக்கு உரியவகையில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து எமது மக்களின் எதிர்கால வாழ்வியல் நிலைமைகளை சிறந்த முறையில் உருவாக்கிக் கொடுப்பதே எமது கட்சியின் தலையாய கடமையாக இருக்கின்றது.


அந்த வகையில் எமக்கு  கிடைக்கின்ற வாய்ப்புகளினூடாக மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முடிந்த வரையில் முன்னெடுத்து சாதித்துக் காட்டி வருகின்றோம் என ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளரும்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேசத்தின் நிர்வாக செயலாளருமான மருதயினார் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறை சின்ன மடுமாதாநகர் சனசமூக நிலைய புதிய நிர்வாக சபை தெரிவு இன்றையதினம் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் -

இப்பகுதியினது அபிவிருத்திக்காகவும் மக்களது வாழ்வாதாரத்திற்காகவும் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் பல்வேறு நலத்திட்டங்களையும் அபிவிருத்தி செயற்பாடுகளையும் தொழில்வாய்ப்புக்களையும் பெற்றுத்துந்துள்ளார்.

பிரதேச சபைகள் என்பது மக்களுக்கான அபிவிருத்திக்குரிய களமாக காணப்படுகின்றது. அது  மக்களுக்குரியது. அந்த சபையை ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் தொடர்ச்சியாக எமது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் வழங்கி வருகின்றார்கள். இப்பகுதி மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் இணங்க நாம் நிச்சயம் உழைக்க தயாராக இருக்கின்றோம்.


அந்தவகையில் ஒவ்வொரு பிரதேச மற்றும் கிராம மட்டங்களிலுள்ள பொது அமைப்புகள் ஒற்றுமையாக செயற்படும் போது அந்தந்த பகுதிகள் அபிவிருத்தியில் முன்னேற்றம் காணமுடியும். அவ்வாறு செயற்பட்டு கிராமத்தின் நலனுக்காக பாடுபடும் மக்களுக்கு கரங்கொடுத்து தூக்கிவிட நாம் தயாராகவே இருக்கின்றோம். அந்தவகையில் இப்பகுதியின் அபிவிருத்திக்கும் கடந்த காலங்களைப்போன்று  உறுதுணையாக இருப்போம் - என்றார்.

இதன்போது  ஊர்காவற்றுறை பிரதேச சபை சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் குறித்த பிரதேச கிராம உத்தியோகத்தர் ஆகியோர் முன்னிலையில் குறித்த சனசமூக நிலையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.