Friday, May 11, 2018

How Lanka

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக - நீதிபதி இளஞ்செழியன் - இடமாற்றம்


யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனிற்கு நீதிச்சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அவருடன் இணைந்து, மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கமர் ஆகியோருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார்.

மேலும், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளதுடன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார்.

அத்துடன், மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சிறிநிதி நந்தசேகரன், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாகவும், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக என்.எம்.எம் அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சட்டமா அதிபர் திணைக்கள மூத்த அரச சட்டவாதியான டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், கல்முனை மற்றும் மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களின் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.

அவருடன் இணைந்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சிறிநிதி நந்தசேகரனும் கடமையாற்றவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நீதிபதி இளஞ்செழியன் இடமாற்றம்பெற்றுச் செல்வது சமூக அமைப்புக்கள்தொட்டு பொதுமக்கள் வரை பல்வேறு தரப்பினரிடத்திலும் விசனத்தைத் தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.