Friday, May 18, 2018

How Lanka

முள்ளிவாய்க்காலில் மிரள வைத்த பல்லாயிரக் கணக்கான மக்கள் படை

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொடர்ச்சியாக ஈழத்தில் முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை சூழவுள்ள இடங்கள் அனைத்திலும் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர் தாயக தமிழர்கள்.


இலங்கை இராணுவத்தினதும், இலங்கை அரசினதும் அந்த கொடூர தாக்குதல்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் விஷ்வரூபம்கொண்டு இலட்சக்கணக்கான தமிழர் குடும்பங்களை கருவறுத்த அந்த இரத்தம்தோய்ந்த தினத்தின் 9ஆம் வருட நினைவேந்தல் இன்றைய தினத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.



2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதியுடன் மௌனிக்கப்பட்டது தமிழர்களின் உரிமைகோரிய யுத்தம் மாத்திரம் அல்ல, தமிழர்களின் சுயமாக செயற்படுவதற்கான சுதந்திரமும்தான்.


இந்நிலையில், இவ்வருடம் 4ஆவது தடவையாக பகிரங்கமாக முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு மாகாண சபையினரினதும், யாழ். பல்கலைக்கழக மாணவர்களினதும் ஏற்பாட்டில் இவ்வருடமும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான யாழ். பல்கலை மாணவர்களின் பேரணியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்டது.

யுத்தம் மௌனிக்கப்பட்ட 2009ஆம் ஆண்டிற்கு முன்னர், தமிழீழ விடுதலைப்புலிகளால் எவ்வாறு மாவீரர் தினங்கள் தொட்டு அவர்களது நினைவுதினங்கள்வரை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டனவோ அதேபோன்று இன்றைய தினம் யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மத, குல பேதம் மறந்து ஆயிரக்கணக்கில் தமிழின எழுச்சிக்காக இன்றைய தினம் மாணவர்கள் ஒன்று திரண்டிருந்தனர்.

இந்த துணிவான செயல்களும், உணர்வுபூர்வமான அஞ்சலிகளும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, மீண்டுமொருமுறை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையின் கீழ் உணர்வெழுச்சியுடன் ஒரு நிகழ்வை நடத்தியது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அனைவராலும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், இவ்வாறு படையெடுத்துச் சென்ற பல்கலை மாணவர்களை இலங்கை இராணுவத்தினர் வியப்புடன் நோக்கியதுடன், பேரணியாகச் சென்றவர்களுக்கு குளிர்பானம் கொடுக்க முற்பட்டனர்.

இளைஞர்களின் இந்த படையணி இலங்கை இராணுவத்தினரை ஒரு கணம் ஸ்தம்பிக்கச்செய்ததுடன், மீண்டுமொரு தமிழீழ எழுச்சியை நினைவூட்டியுள்ளது.


இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் முடிவடைந்து, முள்ளவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் செத்து மடிந்து இன்றுடன் 9 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று ஒன்று திரண்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள், உயிரிழந்த தமது உறவுகளை நினைத்து கண்ணீர் விட்டதுடன், கதறி அழுது தவித்ததை காணக்கூடியதாக உள்ளது.

ஒரு பக்கம் கதறி அழும் மக்கள், அஞ்சலி செலுத்தும் உறவுகள், பார்வையாளர்கள், அரசியல்வாதிகள் என பலரும் வருகைத்தந்திருந்தாலும், யாரும் எதிர்பாராத சில சம்பவங்கள் இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் இடம்பெற்றது.

அதாவது, இன்று திரண்ட கூட்டமும், மக்களின் எண்ணமும் தமிழ் மக்களின் அடுத்த தலைவர் விக்னேஸ்வரன் என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடரை ஏற்றுவதற்கான தீப்பந்தத்தை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், கேசவன் விஜிதா என்ற யுவதியிடம் கொடுத்தார்.

இந்த யுவதி இறுதி யுத்தத்தில் தனது பெற்றோரை இழந்து, உறவினர்களையும் இழந்து, தானும் காயமடைந்திருந்தார்.

அந்த கூட்டத்தில் எத்தனையோ அரசியல் பிரமுகர்கள் வந்திருந்த போதும், ஒரு சாதாரண யுவதியிடம் முதலமைச்சர் தீப்பந்தத்தை கொடுத்து ஈகைச்சுடரை ஏற்றவைத்தமை அங்கிருந்தவர்களுக்கு முதலமைச்சர் மீது ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தி விட்டது என்றே கூறவேண்டும்.

யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்திருந்த போதும், 4 வருடங்களாகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகின்றது.

இந்த 4 வருடங்களிலும் இம்முறை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள் சற்று வித்தியாசமானதாகவும், ஏதோ ஒரு விடயத்தை உணர்த்துவதாகவுமே அமைகின்றது.

இயற்கை கூட இன்றைய நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தலைவணங்குவதாகவும், என்றுமில்லாத வகையில் மக்கள் கூட்டம் திரண்டு வந்ததையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்த நிகழ்வுகளை முன்னின்று நடத்த வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களோடு மக்களாக ஒதுங்கி நின்றதை இதில் எத்தனை பேர் கவனித்திருப்பார்கள்.

இவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் மத்திய இடத்திற்கு வராமல் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதையும் புகைப்படங்கள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.

முதல் வரிசையில் அமர வேண்டிய அரசியல் பிரமுகர்களை காணாத நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வர் உள்ளிட்ட அவர் சார்ந்தவர்கள் முதல் வரிசையில் அமர்ந்து நினைவேந்தலை நடத்தியதையும் காணக்கூடியதாக உள்ளது.