Saturday, June 2, 2018

How Lanka

காணாமல் போனோர் அலுவலகங்கள் மீது நம்பிக்கை இல்லை - டக்ளஸ் தேவானந்தா


காணாமல் போனோர் அலுவலகங்களின் செயற்பாடுகள் கண்துடைப்புச் செயற்பாடாகவோ, நீதியைக் கோரிநீற்கும் தமிழ் மக்களின் கோரிக்கையை காலம் தாழ்த்தி காலாவதியாக்கும் செயற்பாடாகவோ அமைந்துவிடக்கூடாது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -

ஏற்கெனவே காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாட்டு சட்டவரைபு தொடர்பாகவும், காணாமல் பொனோர் தொடர்பான விசாரணைகளை எந்தளவுக்கு இந்த அலுவலகத்தினரால் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் முன்னெடுக்கமுடியும் என்பது தொடர்பாகவும் தமிழ் மக்களிடையே நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது.

இருந்தபோதும், காணாமல் போனோர் அலுவலகத்தை ஏற்படுத்துவதில் விருப்பமற்று இருந்த இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட பலதரப்பட்ட அழுத்தங்களைத் தொடர்ந்து காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பதற்கு இலங்கை அரசு முன்வந்திருந்தது.

எனினும் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை செய்வதற்காக என்று கூறி கடந்தகாலங்களில் மாறிமாறி ஆட்சிக்கு வந்திருந்த அரசுகள் பல ஆணைக் குழுக்களை அமைத்தனவேதவிர அந்த ஆணைக்குழுக்களிடமிருந்து எமது மக்களுக்கு நீதிகிடைக்கவில்லை.  ஆணைக்குழுக்கள் அமைக்கும் அரசாங்கங்களின் முயற்சிகள் காலம் கடத்தும் தந்திரோபாயங்களாகவே இருந்தன. அதுபோன்ற ஒருகாலம் கடத்தும் முயற்சியாக இந்தகாணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடும் அமைந்து விடுமோ என்ற அவநம்பிக்கையுடனேயே தமிழ் மக்கள் இருக்கின்றனர்.

காலத்துக்குக் காலம் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளையும், சாட்சியங்களையும் கவனத்தில் கொண்டு, குற்றவாளிகளாக அடையாளம் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மீதான விசாரணைகளை, சுதந்திரமாக இவ் அலுவலகத்தினரால் முன்னெடுக்கமுடியுமா? என்றும், காணாமல் போனவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்ற தடுப்புமுகாம்களில் சுதந்திரமாக விசாரணைகளை முன்னெடுக்க முடியுமா? என்றும் எம்மக்களிடையே கேள்விகள் இருக்கின்றன.

காணாமல் போனோர் அலுவலகத்தினருக்கு அதிகார ரீதியாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அதன் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பரந்துபட்டதும், சுதந்திரமானதுமான விசாரணைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை காணாமல் போனோர் அலுவலகத்தினால் நிறைவேற்றமுடியாது என்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியாது என்பதுமே எமது மக்களின் அவநம்பிக்கையாகும்.

எனவே உறவுகளை இழந்து ஏமாற்றங்களுடன், நீதிமறுக்கப்பட்டவர்களாக இருக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கையைக் கட்டி எழுப்புவதற்கு அரசாங்கம் அர்த்தபூர்வமாக செயற்பட வேண்டும். நம்பிக்கையைக் கட்டியெழுப்பாமல் சந்தேகத்தின் அத்திவாரத்தில் கட்டியெழுப்ப முற்படும் எந்தவொரு முயற்சியும் வெற்றியைத் தராது என்பதை உணராது வடக்குகிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் எட்டு காணாமல் போனோர் அலுவலகங்களைஅமைப்பதால் மாத்திரம் எதுவும் நடந்துவிடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - ஊடகப் பிரினால் அனுப்பிவைக்கப்பட்ட செய்தி