Sunday, December 16, 2018

How Lanka

குடும்பத்தினரோடு நேரத்தைக் கழிக்கிறார் மகிந்த ராஜபக்ச

பதவியைத் துறந்த பின்னர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரோடு நேரத்தைக் கழிக்கிறார்

கௌரவ முன்னாள் ஜனாதிபதி என்னும் சிறப்பு கௌரவத்தோடு மகிந்த ராஜபக்ச 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலோடு ஒதுங்கியிருந்திருந்தால், இன்று சிங்கள மக்களால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு அவரின் வெற்றிப் பயணம் அமைந்திருக்கும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் எந்தத் தலைவரும் செய்ய முடியாத, நினைத்தும் கூட பார்க்க முடியாதளவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் அழித்தது.
ரணில் விக்ரமசிங்க வகுத்த சர்வதேச மற்றும் உள்ளக சதிவலைகளையும் பயன்படுத்தி மகிந்த ராஜபக்ச போர் வெற்றியை ஈட்டியிருந்தார்.

அந்த வெற்றி இரண்டாம் துட்டகைமுனு என்னும் பட்டத்தையும், கௌரவத்தையும் மகிந்த ராஜபக்சவிற்கு கொடுத்தது. ஆனால் சமகால அரசியலால் அந்தப் பட்டத்தை கெடுத்துக் கொண்டுள்ளார் மகிந்த ராஜபக்ச.

2015 ஆம் ஆண்டில் மீண்டும் நாடாளுமன்றம் வந்திருந்தாலும், கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி மைத்திரியின் அழைப்பினை மறுத்திருந்தால் கூட மகிந்தவின் செல்வாக்கு அப்படியே இருந்திருக்கும்.

எனினும் பதவியாசை, அவரை ஆட்டிப்படைத்தது. நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, எதிர்க் கட்சித் தலைவராக, சந்திரிகா ஆட்சியில் பிரதமராக, இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவிற்கு இப்போது கிடைத்திருக்கும் பெயர்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் இருந்த உள்ளக முரண்பாடுகள் அல்லது விளக்க முடியாத பிரச்சினைகள் காரணமாக கொலைக்களத்திற்கு கொண்டு செல்லப்படும் ஆடு எவ்வாறு அலங்கரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டதோ அவ்வாறே மகிந்த ராஜபக்சவிற்கும் பிரதமர் பதவியை கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறார் சிறிசேனா.

19வது சீர்திருத்தத்தின்படி, ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்ட பின்னரும், நாடாளுமன்றத்தைக் கலைத்து, விடாப்பிடி அரசியலை நடத்தி, ரணிலை ஏற்கமாட்டேன் என்று உறுதியாக நின்றதன் விளைவு, மகிந்த ராஜபக்சவை தொடர்ந்தும் பதவியிலிருக்க வைத்தது.

ஆனால், உச்ச நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் ஒரே போடாகப் போட்டிருக்கிறது. கௌரவ முன்னாள் ஜனாதிபதி என்று இருந்திருக்கலாம். அல்லது கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் என்றாவது இருந்திருக்கலாம். ஆனால் நீதிமன்றமோ சட்டவிரோத பிரதமர் என்று அறிவித்துவிட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையானது அரசியலமைப்புக்கு முரணானது என்று ஒரு செய்தியும், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதன் மூலமாக அவர் தலைமையிலான அரசாங்கம் சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டது.

இதன்பின்னர் தான் தனது பதவியை துறந்தார் மகிந்த. செல்வாக்குகளை தக்க வைத்திருந்த மனிதர், செல்வாக்குகள் சரிந்து போன நிலையில் தங்காலைக்குப் புறப்பட்டு சென்று இருக்கிறார்.

தங்காலைக்கு சென்று குடும்பத்தினரோடும், ஆதரவாளர்களோடும் கலந்துரையாடியிருக்கிறார். ஒரு பக்கத்தில் இன்று மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க பதவியேற்று ஆலோசனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், தங்காலையில் மன நிம்மதிக்காக மகிந்த ராஜபக்ச குழந்தைகளோடும், குடும்பத்தினரோடும் நேரத்தைக் கழிக்கிறார் என்று சமூக வலைத்தளவாசிகள் பதிவிட்டுவருகின்றனர்.