மென்பொருள் ஜாம்பவானான, 'இன்போசிஸ்' விரைவில் இந்தியாவிலுள்ள, 220 அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி தர திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தையும், புதுமை படைக்கும் திறனையும், தொழில்முனையும் உருவாக்குவதே இதன் அடிப்படை நோக்கம் என்று, 'இன்போசிஸ் சயின்ஸ் பவுண்டேஷன்' அமைப்பின் தலைமை நிர்வாகி எஸ்.டி.சிபுலால், சமீபத்தில் ஊடகங்களிடம் தெரிவித்தார். ஏற்கனவே, 2009 முதல் பல துறைகளில் சாதனை புரியும் இந்திய அறிஞர்களுக்கு, இன்போசிஸ் பரிசை அந்நிறுவனம் வழங்கி வருகிறது. உலகில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் மொத்த தொகையில், 40 சதவீதத்தை இந்தியா, ஆராய்ச்சிக்கு செலவிடுகிறது. இருந்தாலும் இந்தியாவில், 10 ஆயிரம் பணியாளர்களில் நான்கு பேரே ஆராய்ச்சியாளர்களாக இருக்கின்றனர். மேலும், அறிவியல் பட்டப்படிப்புகளை தேர்ந்தெடுக்கும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையை மாற்றவும், மாணவர்களுக்கு அறிவியல் துறைகளில் ஆர்வத்தை அதிகரிக்கவுமே, அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி திட்டத்தை துவக்கியிருப்பதாக, இன்போசிஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.