Thursday, September 29, 2016

How Lanka

மாணவர்களே இது உங்களுக்காக!

“சார்க்” எனப்படுவது தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு (South Asian Association for Regional Cooperation - SAARC) என்பதின் சுருக்கச் சொல்லாகும்.

இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் இருந்தே இத்தகைய ஒரு கூட்டமைப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அப்போது இந்தியா கடைபிடித்த "அணிசேரா" கொள்கையை மையமாகக் கொண்டு இந்த கூட்டமைப்புக்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கபட்டன.

இந்த முயற்சியின் விளைவாக சார்க் கூட்டமைப்பானது 1985ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டது.

சார்க் அமைப்பானது இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், மாலைத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் தலையீட்டினாலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வமைப்பை நிறுவும் பொருட்டு ஆலோசனை வழங்கியவர் ஜியாவூர் ரஹ்மான். நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு என்பவற்றை மேம்படுத்தும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட ஓர்அமைப்பாகும்.

இந்த சார்க் கூட்டமைப்பில் 2007ஆம் ஆண்டு வரை 7 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருந்தன. அவையாவன,

1.இந்தியா

2.பாக்கிஸ்தான்

3.வங்காளதேசம்

4.மாலைத்தீவு

5.இலங்கை

6.நேபாளம்

7.பூட்டான்

சார்க் அமைப்பில் 2005ஆம் ஆண்டு ஒரு திருப்பம் நிகழ்ந்தது. மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானையும் இதில் இணைத்துக் கொள்ளலாம் என்று விவாதிக்கப்பட்டது.

இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் இந்தியாவின் முழு முயற்சியில் ஆப்கானும் சார்க்கில் அங்கமானது.

தொடர்ந்து, 2007 ஏப்ரலில் நடைப்பெற்ற 14ஆவது உச்சி மாநாட்டில் 8 ஆவது உறுப்பு நாடாக ஆப்கானிஸ்தான் இணைத்துக் கொள்ளப்பட்டது. சாரக் அமைப்பின் தலைமையகமானது நேபாளம் காத்மண்டு நகரில் அமைந்துள்ளது.

சார்க் அமைப்பின் முதலாவது மாநாடானது 1985ஆம் ஆண்டில் டிசம்பர் 7ஆம் திகதி வங்காளதேசத்திலுள்ள தாகா எனும் இடத்தில் நடந்துள்ளது. இதுவரையில் 18 சார்க் உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன.

தொடக்கத்தில் ஆண்டுக்கு ஒரு முறை கூடி விவாதித்தது சார்க். பின்னர் இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் இடைவெளிகளும் விடப்பட்டு கூட்டப்பட்டன.

கடைசியாக 2011ஆம் ஆண்டுதான் சார்க் மாநாடு நடைபெற்றது. தற்போது 3 ஆண்டுகள் கழித்து நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் 18ஆவது சார்க் மாநாடு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

2007ஆம் ஆண்டுக்கு பின்பு எந்தவொரு நாடும் உறுப்பு நாடாக இணைத்துக் கொள்ளப்படவில்லை. எனினும் உறுப்பு நாடாக வேண்டும் என்ற விருப்பத்தை சீனக் குடியரசு மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம், பாக்கிஸ்தான், இலங்கை ஆகிய ஆறு நாடுகள் பார்வையாளர்களாக உள்ளனர். இதை விட ரஷ்யா, மியன்மார் மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

15ஆவது சார்க் மாநாடானது 2008 ஆகஸ்ட் மாதம் கொழும்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த மாநாட்டின் போது தெற்காசிய திறந்த பொருளாதார வலயத்தில் ஆப்கானிஸ்தானையும் இணைத்துக் கொள்ளல், பயங்கரவாதத்தையும் குற்றவியல் சட்டத்தில் இணைத்துக் கொள்ளல், சார்க் பிராந்தியத்திற்கான நிலையியல் நிறுவனம் ஒன்றை நிறுவுதல், சார்க் நாடுகளுக்கு இடையில் பொது நிதியம் ஒன்றை ஏற்படுத்தல் ஆகிய நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதே போன்று 6ஆவது சார்க் உச்சி மாநாடும் கொழும்பிலேயே நடைப்பெற்றுள்ளது. இந்த மாநாடானது 21ஆம் திகதி டிசம்பர் 1991 ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச தலைமையில் நடைப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் இராஜதந்திரியான நிஹால் ரொட்ரிகோ 6ஆவது சார்க் உச்சி மாநாட்டில் பொது செயலாளராக பணியாற்றியுள்ளமை இலங்கைக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.

இம்முறை நடைபெறவுள்ள 19ஆவது சார்க் உச்சி மாநாடானது பாக்கிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரத்தில் நவம்பர் 9ஆம் திகதியன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்க் அமைப்பின் தற்போதைய தலைவர் முகமது ஹாசன் மானிக் ஆவார். இந்த அமைப்பின் செயலாளராக அகமது சலீம் பொறுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

இம்முறை நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பங்கெடுக்கப்போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பயங்கரவாத தாக்குதல்களே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சார்க் மண்டலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் நிர்வாக மையத்தை தங்கள் நாட்டில் அமைக்க வேண்டும் என்ற போட்டியில் இந்தியாவும் பாக்கிஸ்தானும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், புதிய பேரிடர் மேலாண்மை மையத்தை இந்தியாவில் நிறுவ சார்க் அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்திருந்தது. மேலும் இது பற்றிய மேலதிக விடயங்கள் நடைபெறவுள்ள 19 ஆவது மாநாட்டில் பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாது என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.