Monday, December 26, 2016

How Lanka

பிரமிட் கட்டமைப்பு என தெரியாது ஏமாற்றப்படும் யாழ்மக்கள் - கவனமாக இருங்கள்


யாழ். மக்களுக்கு ஓர் எச்சரிக்கை: பிரமிட் பண ஆசையில் பிணமாகும் முட்டாள்கள்….

Global Organization எனும் பெயரிலும், Knet , MLS, மற்றும் இன்னுமொரு புத்தளத்தை சேர்ந்த வியாபாரமையம் சில சமூக விரோதிகள் அப்பாவி மக்களை இத் திட்டத்தால் ஏமாற்றி வருகின்றார்கள். பிரமிட் திட்டத்துக்கு மாற்று பெயர்கள் வைத்து நடத்துகிறார்கள். தயவு செய்து மக்கள் இவற்றுக்கு ஏமாற வேண்டாம்.

சில நாட்களுக்கு முன் எனது நண்பன் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி ஒரு வேலை வாய்ப்பு இருக்கிறது. மாதம் 100 000 முதல் 150 000 வரை உழைக்கலாம். சிறந்த ஒரு தொழில் நிறுவனம் இதனை நடத்துகிறது. இதில் சேருமாறு எனக்கு அழைப்பு விடுத்தான். நானும் ஆர்வ மிகுதியில் என்ன வேலை என்று சென்று பார்த்தேன்.

தம்பி வாழ்க்கையில் settle ஆக உமக்கு ஆசையா? வீடு கார் என்று சந்தோசமாக ஆடம்பரமாக வாழ உமக்கு ஆசையா? நீர் ஒரு வேலைக்கு போகிறீர் மாதம் 50 000 சம்பளம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீர் ஆசைப்படும் பெரிய வீடு, கார் என்று வாழ குறைந்த பட்சம் மூன்று கோடி ரூபாய்கள் உமக்கு தேவப்படும். அப்படி என்றால் உம்முடைய வருமானத்தில் தான் அதை எல்லாம் நீர் உழைத்து பெற வேண்டும் எனில் உமக்கு 50 வருடங்கள் தேவைப்படும். ஆனால் எமது நிறுவனத்தில் நீர் பகுதி நேர வேலைக்கு சேர்ந்தாலே மாதம் 150 000 வரை உழைக்கலாம். அப்படி என்றால் நீர் 10 வருடத்திலேயே வாழ்க்கையில் settle ஆகி விடலாம். இப்போ உமக்கு 20 வயது 30 வயதிலேயே நீர் விரும்பிய வாழ்க்கை உமக்கு கிடைத்து விடும். என்று ஆசை காட்டினார்கள்.

முதல் கட்டமாக நீர் 140 000 ஐ எமது நிறுவனத்தில் கட்டி வேலைக்கு சேர முடியும். நாம் அந்த பணத்திற்கு வீட்டு உபயோகப் பொருட்களை வழங்குவோம் அதாவது Solar light, Water filter போன்றவைகள். நீர் அந்த பொருட்களை விற்பனை செய்யலாம் அல்லது வீட்டு பாவனைக்கு பயன்படுத்தலாம் என்றார்கள்.

இதன் மூலம் எனக்கு எப்படி வருமானம் வரும் என்று கேட்டேன்

நீர் உமக்கு தெரிந்தவர்களை இத் திட்டத்தில் இணைப்பதன் மூலம் உமக்கு கொமிசன் கிடைக்கும் என்றார்கள். இருவரை நான் சேர்த்துக் கொடுத்தால் 13 000 ரூ கிடைக்கும்.

நீர் சேர்த்து விட்டவர்களும் இன்னும் வேறு இருவரை தனி தனியே சேர்ப்பார்கள் அவர்களது பணத்திலும் 13 000 உமக்கு வழங்குவோம் அப்படியே இந்த சங்கிலி தொடர்புகள் மூலம் நீர் மாதாந்தம் 150 000 முதல் இன்னும் நிறைய உழைக்கலாம் என்றார்கள்.

உடனே நான் கேட்டேன் என்னை ஒருவர் சேர்த்திருப்பார் அவரை ஒருவர் சேர்த்திருப்பார் அவரையும் ஒருவர் சேர்த்திருப்பார் இவர்கள் எல்லாரிற்கும் நான் குடுக்கும் 140 000 இல் இருந்து ஆள் ஆளுக்கு 13 000 கொடுப்பீர்கள் எனில் எனக்கு வழங்கப்பட உள்ள வீட்டு உபயோகப் பொருட்களின் உண்மை விலைப் பெறுமதி என்ன என்று கேட்டேன்.

அவர்களால் சரியான விடையை கூற முடியவில்லை. இது ஒரு மக்களிற்கான சேவை என்று கூறினார்கள். அவர்கள் தர இருந்த பொருட்களின் உண்மை பெறுமதியை நான் தேடி அறிந்ததில் அவை 25 000 இலும் குறைவாகவே இருந்தது.

அட கடவுளே 25 000 கூட பெறுமதி இல்லாத பொருட்களை நான் ஏன் 140 000 கொடுத்து வாங்க வேண்டும்? அப்படி என்னுடைய மிகுதிப் பணமான 115 000 ஐ நான் திருப்பி பெற (115 000/13000) = 9 சங்கிலி தொடர்புகள் முடிந்திருக்க வேண்டும் அதாவது ஒவ்வொருவரும் இருவர் இருவராக சேர்த்து சேர்த்து 2 இன் 9 ஆம் அடுக்கு அதாவது 512 நபர்கள் இத் திட்டத்தில் இணைக்கப் பட்ட பின்பு தான் நான் கட்டிய பணம் எனக்கு வந்து சேரும்.

அனால் அந்த நிறுவனத்திற்கு 512 புதிய உறுப்பினர்கள் கிடைத்து இருப்பார்கள் அவர்கள் ஒவ்வொருவர் மூலமும் (140 000 x 512) =71 680 000 கிடைத்து இருக்கும். கொள்ளை இலாபம் அவர்கள் அடைவார்கள். பணத்தை கட்டிய நாமோ நடு வீதியில் தான் நிற்க வேண்டும்.

அத்துடன் இந்த சங்கிலி தொடர்புகளில் யாராவது ஒருவர் இன்னொருவரை சேர்க்க தவறின் இந்த பணம் கூட கிடைக்காது போய்விடும்.

இப்படியான போலி நிறுவனங்கள் அரசாங்கத்தில் பதிவு செய்ய படுவதில்லை. அவர்களிற்கு என்று ஒரு அலுவலகம் கூட இல்லை. ஒரு வீட்டில் தான் இயங்கி கொண்டு இருக்கின்றனர். எமது பணம் திருப்பி வர 9 சங்கிலி தொடர்புகள் செல்லும் வரை அவர்களது நிறுவனம் இயங்குமா என்று கூட தெரியாது.

இவ் அமைப்புகள் தற்போது யாழ்ப்பாணத்தில் A/L பரீட்சை எழுதிய மாணவர்கள் எனி தமது வாழ்க்கையை பற்றி யோசிக்க தொடங்குவார்கள் என்பதால் அவர்கள் மீது தமது கவனத்தை செலுத்தி மூளைச் சலவை செய்து இருக்கிறது.

எனது பாடசாலை நண்பர்களில் சிலர் கூட அதில் சிக்கி கொண்டு வெளி வர முடியாமல் தவிக்கிறார்கள். அதிலும் அவர்கள் வணிகப்பிரிவில் கற்றவர்கள் என்பதே மிக கவலைக்கிடமாக உள்ளது.

இத் திட்டத்தில் இணைத்து கொள்வதற்காக நவீன வகை கார்களில் அழகிய அக்காமார் உங்கள் வீடுகளிற்கு வருகை தந்து பலவிதங்களில் மூளைச்சலவை செய்வார்கள். இத் திட்டத்தால் பாதிக்கப் பட்ட ஒருவன் உங்கள் நண்பனாக இருப்பினும் அவன் இன்னும் இருவரை சேர்க்க வேண்டும் என்பதால் உங்களுடன் நல்ல விதமாக கதைத்து ஆசை வார்த்தைகளை காட்டி உங்களை ஈர்க்க முயற்சி செய்வான்.

இப்படியான பிரமிட் கும்பல்கள் இலங்கையில் தடை செய்ய பட்டு உள்ளது. இவற்றில் பணம் இடுவதும் ஆட்களை சேர்த்து கொடுப்பதும் சட்ட விரோதமானது. இப்படியான நிறுவனத்தில் உங்களை இணைத்துக் கொண்டு உங்கள் பணத்தை இழப்பது மட்டுமல்ல சிறையில் கம்பி எண்ண வேண்டிய நிலை கூட வரலாம்.

சிந்தித்து செயற்படுங்கள் மக்களே