Saturday, July 22, 2017

How Lanka

அதிகாரியின் கதிரையில் அமர்ந்து பார்வையாளர்களை சந்தித்த சசிகலா


பெங்களூர் சிறையில் அதிகாரியின் கதிரையில் அமர்ந்து சசிகலா பார்வையாளர்களைச் சந்தித்தார் என முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் செய்தியாளர்களிடம் முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா நேற்று கூறியதாவது:

பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று சசிகலாவின் அறையில் சோதனை நடத்தும்படி என்னை யாரும் தூண்டி விடவில்லை. எனக்கு சிறை முறைகேடு தொடர்பாக புகார் வந்ததால் நானாக சென்றுதான் சோதனை நடத்தினேன்.

சிறையில் சசிகலா சல்வார் அணிந்து கையில் பையுடன் இருப்பது போன்ற வீடியோவும், நைட்டி அணிந்து நடமாடுவது போன்ற வீடியோவும் உண்மையானதுதான். அந்த வீடியோவை சந்தேகிப்பதைக் காட்டிலும், அவ்வாறு நடைபெற்றதா என அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும்.

நான் சோதனை நடத்தியபோது சிறையில் சுமார் 150 அடி நீளமுள்ள ஒரு பிளாக் முழுவதும் சசிகலாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த 5 அறைகளையும் சசிகலா சமையல் செய்யவும், யோகா செய்யவும், உறங்கவும் பயன்படுத்தினார். அதில் நடு அறையில் சசிகலா கட்டில், மெத்தை, எல்இடி டிவி ஆகியற்றை வைத்து பயன்படுத்தி வந்தார். இந்த பொருட்கள் யாவும் சிறையில் வழங்கப்பட்டவை அல்ல.

சிறையில் உள்ள மற்ற கைதிகள் சசிகலாவைச் சந்திக்கவும், பேசவும் தடைவிதிக்கப்பட்டு இருந்தது. சசிகலா தங்கி இருக்கும் பகுதிக்கு செல்லாமல் இருக்க தடுப்பு போடப் பட்டிருந்தது. இதே போல சிறை பொலிஸார் சசிகலா தங்கியிருக்கும் பகுதிக்கு அருகில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சிறையில் கைதிகள் பார்வையாளர்களைச் சந்திக்கும் இடத்தில் (7-ம் எண்) சிசிடிவி கெமரா உள்ளது. அந்த கெமராவில் சசிகலா பார்வையாளர்களைச் சந்திக்கும் காட்சிகள் ஒருமுறை கூட பதிவாகவில்லை. மாறாக சிசிடிவி கெமரா இல்லாத அறையில் சசிகலா பார்வையாளர்களை சந்தித்துள்ளார். குறிப்பாக சிறையில் உள்ள உயர் அதிகாரி ஒருவரின் அறை காலியாக இருந்துள்ளது.

அந்த அறையில் அதிகாரியின் சுழலும் நாற்காலியில் அமர்ந்து சசிகலா பார்வையாளர்களை சந்தித்துள்ளார். அங்கு பெரிய அளவில் சோஃபா, 4 நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. இதே போல சசிகலாவுக்காக தனியாக உணவு சமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எனக்கும் சசிகலாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. உண்மையில் சிறையில் நடை பெறும் முறைகேடுகளைத்தான் வெளியே கொண்டு வந்தேன். ஆனால் ஊடகங்கள் சசிகலா விவகாரத்தை பெரிதாக்கி விட்டார்கள். இவ்வாறு ரூபா தெரிவித்தார்.