Monday, September 11, 2017

How Lanka

இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் அரச வைத்திய அதிகாரிகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழுவின் உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொழம்பகே குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய 08 மாவட்டங்களில் இன்று காலை எட்டு மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது , கவனயீர்ப்புப் பேரணி நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக டொக்டர் பிரசாத் கொழம்பகே தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன், சைட்டத்திற்கு எதிரான மக்கள் அணியினரும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, சைட்டம் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று (11) மாலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் நேற்று மாலை கலந்துரையாடப்பட்டதாக சைட்டம் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினரான அமைச்சர் , கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பில் ஜனாதிபதியால் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.