Monday, September 11, 2017

How Lanka

இலங்கைக்கு செயீத் ராத் அல் உசைன் எச்சரிக்கை

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசு நீதியை நிலைநாட்டத் தொடர்ந்தும் தவறினால் அந்த சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை செய்ய வேண்டிய அவசியம் எழுந்து விடும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன் இலங்கைக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரை முன்னிட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்துள்ள அவரது எழுத்து மூல உரையிலேயே இந்த விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன் தனது உரையில் இலங்கை தொடர்பில் எந்தக் கருத்தையும் குறிப்பிட்டிருக்கவில்லை.

எனினும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைனின் இன்றைய உரையின் எழுத்து வடிவம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கை தொடர்பில் சில விடயங்கள் கோடி காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தை தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறும் இலங்கை இராணுவம் உட்பட அரச படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதை துரிதப்படுத்துமாறும் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்குகளை துரிதமாக முடிவுக்கு கொண்டவருமாறும் கோரிக்கை விடுத்துள்ள ஆணையாளர் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மதித்து அவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் பதிய சட்டத்தை இயற்றுமாறும் இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.

அதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை உருவாக்குவது உள்ளிட்ட ஏனைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட கால வரையரையொன்றை வகுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியிருக்கின்றார்.

சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறியது தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தொடர்ந்தும் தவறினால் அந்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையின் கீழ் அதனை நிறைவேற்ற வேண்டிய தேவையின் அவசியம் எழுவதை தடுக்க முடியாது போய் விடும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.