Saturday, September 2, 2017

How Lanka

அமைச்சர்களுக்கு உள்ள அதிகாரம் நீக்கம்

தமது எண்ணத்திற்கு அமைய வரி சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சர்களுக்கு உள்ள அதிகாரத்தை, புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் மூலம் நீக்கியுள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செய்திப் பணிப்பாளர் எம்.ஏ.ஹசனின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் உள்ளூர் பிரஜைகளை அழிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளை திருப்திப்படுத்தும் ஒன்று என தெரிவித்துள்ள பந்துல குணவர்தன, தாமும் அங்கம் வகித்த கடந்த ஆட்சியின் மூலோபாய அபிவிருத்திச் சட்டத்தின் ஊடாக, வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு பெருமளவு வரிச்சலுகை மற்றும் கால அவகாசம் வழங்கப்பட்டமையை மறந்துவிட்டாரா என அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தரகர் கூலியைப் பெறுவதற்காக, இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி தமது சகாக்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட வெளிநாட்டவர்களுக்கு நீண்டகால வரிச்சலுகையை கடந்த அரசாங்கம் வழங்கியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் இந்த செயற்பாடு காரணமாக மொத்த சனத்தொகையில் 10 வீதமானவர்கள், பொருளாதாரத்தின் 45 வீதத்தை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டதாகவும் திரைமறைவில் வரிச்சலுகைகள் வழங்கும் கொள்கை பின்பற்றப்பட்டாதாகவும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செய்திப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தற்போதைய அரசாங்கம் இதுவரை ஓரம்கட்டப்பட்டிருந்த உள்நாட்டு முதலீட்டாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முதலீட்டுக்கு ஏற்ற வரிச்சலுகையை வழங்குவதற்கும் வரிச்சலுகைக் காலத்தை அறிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரிச்சலுகை காலத்தை பெற்றுக் கொள்வதற்கு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது சகாக்களுக்கு பின்னால் செல்ல வேண்டியிருந்த யுகம் புதிய சட்டத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் வரிச்சலுகை தொடர்பில் புதிய சட்டத்தில் முறையான பொருட்கோடல் வழங்கப்பட்டுள்ளதால், தமக்குக் கிடைக்கும் வரிச்சலுகை குறித்து எந்தவொரு முதலீட்டாளரும் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் தமது அபிப்பிராயத்திற்கு அமைய முறையற்ற வகையில் வரிச்சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சர்கள், திணைக்கள மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் புதிய உள்நாட்டு இறைவரி சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து இரத்துச் செய்யப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது, மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான குழு பொய் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றி தவறான வழியில் இட்டுச் செல்ல முயற்சிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரிச்சலுகை மற்றும் வரிச்சலுகை காலத்தை வழங்குவதற்கு நாட்டின் நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரமும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதால் இரத்தாகியுள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆறு இலட்சம் ரூபா வருடாந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களும், சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் புதிய சட்டத்தினூடாக வரி அறவீட்டிற்கு உள்வாங்கப்படவுள்ளதாக முன்வைக்கப்படுகின்ற கூற்றுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொழில் முயற்சியாளர்கள், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்கள், விவசாயிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான வரிச்சலுகையுடன் கூடிய, புதிய எட்டு கடன் திட்டங்கள் செப்டெம்பர் மாதம் முதல் அரச மற்றும் தனியார் வங்கிகளினூடாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.