Friday, September 29, 2017

How Lanka

போதிய தொழில்நுட்ப வசதி இல்லாத காரணத்தால் இழுத்தடிக்கப்படும் சுன்னாகம் நீர் மாசு வழக்கு


சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நீர் மாசடைந்தமை தொடர்பிலான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சுன்னாகம் மின் நிலையத்தினை அண்மித்த பகுதிகளில் உள்ள நீரில் எண்ணெய் மற்றும் கிறீஸ் என்பன கலந்தமைக்கான உண்மையான காரணத்தினைக் கண்டறியுமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபையினருக்கு கடந்த விசாரணைகளின் போது உத்தரவிடப்பட்டிருந்தது.


எனினும், போதிய தொழில்நுட்ப வசதி இல்லாத காரணத்தால், முழுமையான அறிக்கையினை வழங்க முடியாது என தெரிவித்து மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் அறிக்கையொன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இதற்கு பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை , மத்திய சுற்றாடல் அதிகார சபை, பொது சுகாதார பரிசோதகர், வலிகாமம் தெற்கு பிரதேச சபை அதிகாரிகள் உள்ளிட்டோர் இன்று மன்றில் ஆஜராகியிருந்தனர்.

நொதர்ன் பவர் நிறுவனம் சார்பாக சட்டத்தரணியும் இன்று மன்றில் ஆஜராகியுள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.