Thursday, September 28, 2017

How Lanka

யாழ்.இந்துவில் தேசிய தமிழ் தின விழா

தேசிய தமிழ் தின விழா இம்முறை யாழ்.இந்து கல்லூரியில் எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் நடைபெறும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேற்படி தேசிய தமிழ் தின விழா தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

இவ்வாண்டு தேசிய தமிழ் தின விழா யாழ்.மாவட்டத்தில் உள்ள யாழ்.இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் பண்பாட்டு ஊர்வலம் மற்றும் தமிழ் பண்பாட்டு கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

குறிப்பாக இந்நிகழ்வில் தென்னிந்தியாவில் புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு பட்டிமன்றங்களும் இடம்பெறவுள்ளது.

வடமாகாணத்தில் இராணுவத்திடம் உள்ள பாடசாலைகள் தொடர்பாக முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு தனித்தனியாகவும் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கு இன்று காலை ஒன்றாகவும் சந்திப்புக்களை நடத்தியுள்ளோம்.

இதனடிப்படையில் வட மாகாணத்தில் 16 பாடசாலைகள் இராணுவ கட்டுப்பாட்டில் மற்றும் இராணுவ சுற்றாடலுக்குள் இருக்கின்றது.

எனவே அவை தொடர்பாக ஆராய்வதற்கு குழு ஒன்றை நியமித்திருக்கின்றேன்.

அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் பல இடங்களில் இராணுவம் தங்கள் முகாம்களை அகற்ற இணக்கம் காட்டியுள்ளது.

மேலும், யாழ்.மாவட்டத்திலேயே அதிக பாடசாலைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது.

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் 11 பாடசாலைகள் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் அல்லது இராணுவ சூழலுக்குள் இருக்கின்றது.

எனவே அவை தொடர்பாக பேசியதன் அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் 2 பாடசாலைகளை விடுவிக்க படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எனினும் பலாலியில் உள்ள ஆசிரியர் பயிற்சி பாடசாலையை மட்டும் விடுவிக்க படையினர் மறுக்கின்றனர். எனவே அது தொடர்பாக கொழும்பு சென்று பேச்சுவார்த்தை நடத்துவேன் என்றார்.

போரினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பாடசாலைகளின் வள பற்றாக்குறை தொடர்பாக, அவ்வாறு பாடசாலைகளின் வள பற்றாக்குறை தொடர்பாக முறைப்பாடுகள் எவையும் எனக்கு கிடைக்க பெறவில்லை. முறைப்பாடுகள் கிடைக்க பெற்றாலே நடவடிக்கை எடுக்க இயலும் என்றார்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக, போருக்கு பின்னர் படையினர் சீ.எஸ்.டியின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்களை கொண்டு வந்தார்கள்.

இப்போது அவர்களை அரசாங்க கல்வி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகின்றது எனவே இனி அவ்வாறான பிரச்சினை எழாது என்றார்.