தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று வடமாகாணம் தழுவிய ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இதேவேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
வட மாகாண மாவட்டங்களில் உள்ள அரச திணைக்களங்கள் இயங்கிய போதிலும் மக்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு செல்லவில்லை என எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
பாடசாலைகளுக்கு ஆசியர்கள் சமூகமளித்திருந்த போதிலும், மாணவர்கள் வருகை தராமையால் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை.
தனியார் பஸ் போக்குவரத்து சேவைகள் முழு அளவில் முடக்கப்பட்டிருந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
எனினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் தூர சேவையில் மாத்திரம் ஈடுபட்டிருந்தன.
இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஏ 9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் இந்த வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களினால் பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரியிலிருந்து புதிய கச்சேரி வரை பேரணி இடம்பெற்றது.
இதன்போது பேரணியில் ஈடுட்டவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கைளித்தனர்.