உண்ணாவிரதமிருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக இன்று (13/10/2017) நடைபெறவுள்ள வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பிற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை தமிழ் மக்களின் அரசியலாகவே நோக்கப்படவேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகளோடு இணைந்திருந்தவர்களுக்கு அநீதி நடைபெறும் போது அவர்களுக்காக குரல் கொடுப்பது தமிழ் மக்களின் பாரிய பொறுப்பாகும்.
தேசிய பிரச்சினைக்கு உளத்தூய்மையுடன் தீர்வை முன்வைக்க விரும்பும் அரசாங்கம் முதலில் அரசியல் கைதிகள் அத்தனை பேரையும் அரசியல் ரீதியான தீர்மானம் எடுத்து விடுதலை செய்யவேண்டும்.
இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை எனவும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தான் இருக்கின்றார்கள் எனவும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஊடாக தான் இவர்களுக்கு தண்டனை கொடுத்து விடுதலை செய்யலாம் என்பதும் அரசின் இனவாத நோக்கிலமைந்த பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலாகும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தால் கைதுசெய்யப்பட்டு இலங்கையின் சிறைகளில் பல ஆண்டுகளாக பெரும் இன்னல்களுக்கு மத்தியிலும் உளவியல் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நடைப்பிணமாக தமிழ் அரசியல் கைதிகள் வாழ்ந்து வருகின்றார்கள்.
இவர்களின் விடுதலை தொடர்பில் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்ககப்படவில்லை. தங்கள் விடுதலைக்காக பல தடவைகள் சாத்வீக ரீதியில் உண்ணாவிரதப் போராட்டங்களை தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்தனர்.
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எனக் கூறும் அரசாங்கம் இந்த அரசியல் கைதிகள் விவகாரத்தை பயங்கரவாதத்தோடு தொடர்புபட்ட பிரச்சினையாக மட்டுமே பார்க்கின்றது.
தேசிய இனப்பிரச்சினைக்கு உண்மையான தீர்வு காணப்பட வேண்டுமாயின் தமிழ் இனத்தின் அடக்குமுறைக்கெதிதாக போராடியவர்களை முதலில் அரசியல் ரீதியான தீர்மானம் எடுத்து அனைவரையும் விடுதலை செய்திருக்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் அரசியல் கைதிகளாக இருந்த 12, 000 பேரை விடுவிக்க முடிந்ததென்றால் நல்லிணக்கம் எனவும் நல்லாட்சி எனவும் கூறும் தற்போதைய அரசால் தற்போது அரசியல் கைதிகளாக உள்ள 132 பேர்களை மட்டும் விடுவிக்கமுடியவில்லை என்பது பேரினவாதத்தின் அடக்குமுறையின் பழிவாங்கல் நோக்கமே என்பது தெளிவாகின்றது.
இந்த நிலையில் தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து - சிறையில் சாகும் வரை உணவுத் துறப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் கோரிக்கைகளை இழுத்தடிப்பின்றி உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், முழுத் தமிழ் அரசியற் கைதிகளையும் ஓர் அரசியற் தீரமானத்தினூடாக விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும், இன்று நடைபெறவுள்ள கதவடைப்புக்கு போராட்டத்தில் பாடசாலைச் செயற்பாடுகளும் ஸ்தம்பிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆளுநர் செயலகம் முன்பாக இடம்பெறவுள்ள கவனயீர்ப்பிலும் ஆசிரியர்கள் கலந்து தமது சமூகப் பொறுப்பை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கின்றோம்.
இன்றைய தினம் மாணவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் அக்கறை செலுத்துமாறும், மாணவர்களை வீதிகளுக்கு அனுப்பாது பாதுகாப்பாக வீடுகளில் வைத்து பொறுப்பாக செயற்படுமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.