Tuesday, October 17, 2017

How Lanka

ஊழல்களை அம்பலப்படுத்திய பெண் ஊடகவியலாளர் கலிசியா கொலை


பனாமா பேப்பர்ஸ் மூலம் மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட்டின் ஊழல்களை அம்பலப்படுத்திய பெண் ஊடகவியலாளர் கலிசியா கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் பயணித்த கார் மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மால்டாவைச் சேர்ந்தவர் டேப்னி கருவானா கலிசியா (53).

புலனாய்வுப் பத்திரிகையாளரான இவர் ஒன் வுமன் விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளத்தை தொடங்கினார்.

இந்த வலைத்தளத்தில் கலிசியா எழுதிய கட்டுரைகள் மக்களின் வரவேற்பைப் பெற்றன.

பனாமா ஆவணங்களுடன் தொடர்புடைய அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் உட்பட சர்ச்சைக்குரிய முக்கியமான தகவல்களையும் இவர் வெளிப்படுத்தினார்.

இதையடுத்து அவருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்தன. இதனால் பாதுகாப்புக்கோரி பதினைந்து நாட்களுக்கு முன்பு பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (16) அவர் வீட்டிலிருந்து வடக்கு மால்டாவில் பிட்னிஜா என்ற கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது, அவரது கார் மீது மர்மநபர்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதில் காருடன் தூக்கி வீசப்பட்ட கலிசியா சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை.

பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துக்குவிக்க உதவிய நிறுவனம்தான் மொசாக் ஃபென்சேக்கா.

அந்த நிறுவனத்தின் 11.5 மில்லியன் ஆவணங்கள் மற்றும் 214,488-க்கும் மேற்பட்ட கடல்வழி நிறுவனங்களின் விவரம், நிதி மற்றும் வழக்குரைஞர், வாடிக்கையாளர்கள் தகவல்கள், ஊழல் விபரங்கள் ஆகியன கசிந்தன.

இதனை ஆராய 107 நாடுகளின் செய்தியாளர்களின் கூட்டமைப்பு களமிறங்கியது. இதில் ஒருவராக இருந்தவர்தான் டேப்னி கருவானா கலிசியா.

இந்த ஆவணங்கள்தான் பனாமா பேப்பர்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது.