பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸின் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட நால்வருக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் இன்று மாலை இந்த தடை உத்தரவைப் பிறப்பித்தார்.
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன, பிரதான கொள்வனவாளர் நுவன் சல்காது, சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப அதிகாரி சச்சித் தேவதந்திரி ஆகியோருக்கும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, முறிகள் விநியோகம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட நால்வருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதேவேளை, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்றும் சாட்சியம் வழங்கினார்.
நேரடி வைப்பினை நிறுத்துமாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியதாக ஆணைக்குழு முன்னிலையில் இன்று முதற்தடவையாக தகவல் வௌியிடப்பட்டது.
பிரதமரின் ஆலோசனைப்படி, அர்ஜுன் மகேந்திரனின் சிபாரிசுக்கு ஏற்ப, அரச கடன் திணைக்களத்தில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்துள்ளது.
நிதிச்சபையின் 2017 ஆம் ஆண்டு 33 ஆவது கூட்டத்தில் நேரடி வைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொருளாதார விவகாரம் தொடர்பிலான அமைச்சரவை உபகுழுவிலும் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்படவில்லை என இங்கு தெரிவிக்கப்பட்டது.
அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அவரது மருமகனான அர்ஜுன் அலோசியஸின் நன்மை கருதியே மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்டதாக சட்ட மா அதிபர் திணைக்களம் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளது.