கடல் அலையை பயன்படுத்தி எரி சக்தியை உற்பத்தி செய்வது தொடர்பிலான அனுபவத்தையும் தொழில்நுட்பத்தையும் இலங்கைக்கு வழங்க ஃபின்லாந்து விருப்பம் தெரிவித்துள்ளது.
ஃபின்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டின் முன்னணி எரிசக்தி நிறுவனமான ஏ.டபிள்யூ நிறுவனத்திற்கு சென்றபோது இதற்கான இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் கடல் அலை மூலம் எரி சக்தியை உற்பத்தி செய்யும் திட்டத்தை அடுத்த வருடம் ஆரம்பிக்க எண்ணியுள்ளதாக குறித்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோன் லியெலெ யுன்ட் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஆய்வுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள் சுழற்சி தொடர்பிலும் பிரதமர் தலைமையிலான குழுவினர் ஃபின்லாந்தில் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.
இதேவேளை, ஃபின்லாந்தின் சமூக சேவைகள் அமைச்சரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை மற்றும் ஃபின்லாந்தின் இலவச கல்வியையும் இலவச சுகாதார சேவையையும் தற்காலத்திற்கு ஏற்றவாறு வலுப்படுத்த வேண்டியுள்ளதாக பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.