Monday, October 9, 2017

How Lanka

கர்ப்பிணித் தாய் படுகொலை தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுக்கும் விசாரணைகள் திருப்தியளிக்கவில்லை


யாழ் ஊர்காவற்துறையில் கர்ப்பிணித் தாய் மேரி றம்சிக்கா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவபம் தொடர்பிலான வழக்கு ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியால் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுக்கும் விசாரணைகள் திருப்தியளிக்கவில்லை என இரு தரப்பு சட்டத்தரணிகளும் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு இடத்துடன் மாத்திரம் தொடர்புப்பட்ட சம்பவங்கள் குறித்து பொலிஸ் பிரிவிற்குள் விசாரணை நடத்துமாறும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் விசாரணையை ஒப்படைக்க வேண்டாம் எனவும் அண்மையில் சட்டமா அதிபர் திணைக்களம் சுற்றுநிரூபம் வௌியிட்டுள்ளதாக நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பவம் பல்வேறு இடங்களுடன் தொடர்புடையதாக இருந்தால் மாத்திரமே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் விசாரணைகளை ஒப்படைக்க முடியும் எனவும் நீதவான் கூறியுள்ளார்.

வழக்கின் இரண்டு சந்தேகநபர்களும் இம்மாதம் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை பொலிஸாரின் விசாரணை திருப்தியளிக்காவிட்டால் , யாழ் மாவட்டத்திலுள்ள ஏதேனும் ஒரு பொலிஸ் நிலையத்தின் ஊடாக விசாரணையை மேற்கொள்ள முடியும் எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணையை ஊர்காவற்துறை பொலிஸாரே தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இரு தரப்பு சட்டத்தரணிகளும் இன்று இணக்கம் தெரிவித்துள்ளனர்.

யாழ்பபாணம் ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கர்ப்பிணித் தாயான மேரி றம்சிக்கா படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது