யாழ். பல்கலைக்கழகத்தின் 3 பீடங்களுடைய கல்வி செயற்பாடுகளை நிறுத்தி விடுதிகளில் உள்ள மாணவர்களை வெளியேறுமாறு அறிவித்துள்ளதால் மாணவர்களுடைய போராட்டம் நிச்சயமாக தோல்வியடையும் என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைகழக மாணவர்கள் நேற்றும், இன்றும் நடத்திவரும் கதவடைப்பு போராட்டத்தினால் பல்கலைகழகத்தின் 3 பீடங்களின் கல்வி செயற்பாடுகளை நிறுத்துவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் மேற்படி விடயம் தொடர்பாக துணைவேந்தரை இன்று மாலை ஊடகவியலாளர்கள் சந்தித்து இது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மே லும் அவர் கூறுகையில்,
அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதற்கு பல வழிகள் உ ள்ளன. அதனை விடுத்து நிர்வாகத்தை முடக்கி போராட்டம் நடத்த இயலாது.
அதனை நாங்கள் மாணவர்களுக்கு பல தடவைகள் கூறியுள்ளோம். ஆனால் அவர்கள் அதனை புரிந்து கொள்ளவில்லை. அதேபோல் போராட்டம் நடத்துவது தொடர்பாக எங்களுக்கு முன்னர் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் இன்று மாலையும் மாணவர்களை அழைத்து பேசினோம். போராட்டத்தை கைவிடுங்கள் என நாங்கள் கேட்டோம். அதற்கும் மாணவர்கள் மறுத்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் எங்களுக்கு மேல் உள்ளவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதற்கமைய கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவ வணிக பீடம் ஆகியவற்றின் கல்வி செயற்பாடுகளை நிறுத்தும் தீர்மானத்தையும், விடுதிகளில் உள்ள மாணவர்களை நாளை மாலை 4 மணிக்கு முன்னதாக வெளியேற வேண்டும் எனவும் தீர்மானித்துள்ளோம்.
இதன் பின்னர் போராட்டத்தில் 10 மாணவர்கள் மட்டுமே நிற்பார்கள். இதனால் மாணவர்களுடைய போராட்டம் நிச்சயமாக தோல்வியை சந்திக்கும் என துணைவேந்தர் மேலும் கூறியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்களை இடைநிறுத்துவதாகவும், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை நாளைய தினம் வெளியேறுமாறும், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாக முடக்கங்களை முன்னெடுத்ததுடன், வகுப்பு பகிஸ்கரிப்பினையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.
மாணவர்களின் அசாதாரண நிலமைகளை தொடர்பில் இன்று பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகள், ஆராய்ந்துள்ளனர்.
அதனடிப்படையில், கலைப்பீடம், விஞ்ஞானபீடம் மற்றும் முகாமைத்துவம் மற்றும் வணிக கற்கைகள் பீடம் ஆகிய பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இடை நிறுத்துவதுடன், பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் ஊடாக மாணவர்கள் உட்புகுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களையும் நாளைய தினம்(01.11) மாலை 4.00 மணிக்குள் விடுதியில் இருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.