Sunday, October 29, 2017

How Lanka

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரை கடும் மழை - வளி மண்டலவியல் திணைக்களம்


மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்பிலும் கடும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை – தங்காலை – மெதமுலன பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று பகல் ஒரு மணியளவில் பெய்த மழையை அடுத்து ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மெதமுலன பகுதியில் ஹெலிகொப்டர்கள் தரையிறக்கப்படுகின்ற பகுதியில் நெல்லை உலர்த்திக் கொண்டிருந்தவர்களே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர்.

கல்பொத்த பகுதியைச் சேர்ந்த 65 வயதான இருவரும் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கண்டி பேராதனை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது கற்பாறை சரிந்து வீழ்ந்ததில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது சிறுமியின் பாட்டி காயமடைந்துள்ளார்.

இரத்தினபுரி, மாத்தளை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுமாயின் உடனடியாக அந்த பகுதியிலிருந்து வௌியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் அவதானமாக செயற்படுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.