தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை நாட்டின் பல பாகங்களிலும் களை கட்டியுள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் தலைநகர் கொழும்பிலும் இன்றைய தினம் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.
யாழ்ப்பாணத்தில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்ததுடன், நல்லூர் அம்மன் கோவிலில் இன்று காலையிலிருந்து மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
வவுனியாவிலும் மக்கள் தமது துயரங்களை மறந்து கோவில்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
மன்னார் – திருக்கேதீஸ்வரத்தில் இன்று காலை இடம்பெற்ற தீபாவளி தினத்திற்கான விசேட பூஜைகளில் மக்கள் கலந்து கொண்டு புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
வட மேல் மாகாணத்தின் புத்தளம் – முந்தல் பிரதேசத்திலும் தீபாவளி விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன், காலையிலிருந்து மக்கள் கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திலும் வழிபாடுகள் இடம்பெற்றதுடன் அவற்றிலும் அதிகளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையிலும் தீபாவளி களைகட்டியுள்ளது. கோவில்களுக்கு சென்ற மக்கள் தமக்காகவும் தமது சமூகத்திற்காகவும் விசேட பூஜைகளில் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பிலும் இதேவிதமாக மக்கள் கோவிலுக்கு சென்று பூஜைகளில் கலந்து கொண்டதுடன், அங்கும் பெருமளவு மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
மலையகத்திலும் மக்கள் தீபாவளி வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.