இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியை பார்த்தவுடன், டோனியின் ரசிகன் அந்த இடத்திலே அழுத சம்பவம் அங்கிருந்த ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே 4-வது ஒருநாள் போட்டி கடந்த 28-ஆம் திகதி நடைபெற்றது.
இப்போட்டியின் போது டோனியை சந்திக்க வேண்டும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த காசிம் அடில்(16) என்ற ரசிகர் கடந்த 25-ஆம் திகதியே அதாவது மூன்று தினங்களுக்கு முன்னர், டோனியை சந்தித்து விடலாம் என்ற எண்ணத்தில் பெங்களூருக்கு சென்றுள்ளார்.
இதற்காக அவர் டோனி தங்கியிருந்த ரிஜ் கார்ல்டன் ஹோட்டலில் தங்கி தினமும் 8 மணி நேரம் டோனியை சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருந்துள்ளார்.
ஹோட்டலில் உள்ள லாபி, ஜிம், நீச்சல் குளம், சலூன் உள்ளிட்ட இடங்களில் பல மணி நேரம் தினமும் காத்திருந்துள்ளார். ஆனால் டோனியை அங்கு பார்க்க முடியவில்லை.
இதனால் நொந்து போன அவர், டோனியை சந்தித்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் மைதானத்திற்கே நேரில் சென்று காத்துக்கிடந்துள்ளார். ஆனால் அங்கும் அவருக்கு பார்க்க அனுமதி கிடைக்கவில்லை.
இறுதியாக காசிம், ஹோட்டலில் எத்தனை மணிக்கு டோனி சிற்றூண்டி அருந்த வருவார் என கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் காலை 10 மணிக்கு வருவார் என தெரிவித்துள்ளார்.
எப்படியும் டோனியை பார்த்தே ஆக வேண்டும் என்ற நோக்கில், காலை 6 மணிக்கே காசிம் அங்கு சென்றுள்ளார். டோனி வந்தவுடன், உணர்ச்சியை அடக்கமுடியாமல் டோனியை பார்க்க ஆவலாக சென்றுள்ளார். ஆனால் டோனியை சுற்றி இருந்த பாதுகாப்பு வீரர்கள் அவரை தடுத்துள்ளனர்.
இதன் காரணமாக காசிம் டோனி சாப்பிட்டு கொண்டிருந்த டேபிளுக்கு அருகில் அமர்ந்துள்ளார்.
அப்போது டோனி சாப்பிட்டு முடித்தவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பலரும் சென்றுள்ளனர். அப்போது மாணவன் காசிம்மும் சென்றுள்ளார்.
டோனியின் அருகில் சென்றவுடன் தன்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் டோனி என்னை பார்த்தவுடன் அருகில் வா ஏன் அழுகிறாய் என்று தன்னை கட்டி அணைத்துக் கொண்டதுடன், பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளாய், இவ்வளவு பெரிய ரசிகனாக இருக்கிறாயே என்று கேட்டதாகவும், அப்போது அவர் அருகில் இருந்த போது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை எனவும் காசிம் கூறியுள்ளார்.