அரசாங்கத்திற்கு அவசர நிதித்தேவை ஏற்பட்டால் அதனை அலுவலக மட்டத்தில் திறைசேரிக்கு அறிவிக்க வேண்டும் என முறிகள் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று தெரிவிக்கப்பட்டது.
திறைசேரியின் பிரதி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல சத்தியக்கடதாசியொன்றின் ஊடாக ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்தார்.
2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட அவசர நிதித்தேவை தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் அல்லது அமைச்சர் திறைசேரிக்கு அறிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
அப்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கையொப்பமிட்டுள்ள கடிதமொன்றில் குறிப்பிடப்பட்டிருந்த 75 பில்லியன் ரூபா அவசர நிதித்தேவை திறைசேரிக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் எஸ்.ஆர். ஆட்டிகல மேலும் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த கடிதத்தை ஏற்கனவே சமர்ப்பித்திருந்தார்.
இந்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்ட திகதி அல்லது அனுப்பிவைக்கப்பட்டவர் தொடர்பில் குறிப்பிடப்படாததால் அதனை சட்ட மா அதிபர் திணைக்களம் ஆட்சேபனைக்கு உட்படுத்தியுள்ளது.
அவசர நிதித்தேவை, அதனுடன் தொடர்புடைய மாதாந்த நிதித்தேவை குறித்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என எஸ்.ஆர். ஆட்டிகல கூறியுள்ளார்.
75 பில்லியன் ரூபா அவசர நிதித்தேவை ஏற்பட்டால் நிதி அமைச்சு அலுவலக மட்டத்தில் அதனை திறைசேரிக்கு அறிவிக்க வேண்டும் என்பதுடன், திறைசேரி அதனை இலங்கை மத்திய வங்கிக்கு அறிவிப்பது வழமையாகும்.
பின்னர் மாதாந்த நிதித்தேவை பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அது அரச கடன் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதி அமைச்சர் ஒருவர் மத்திய வங்கியின் ஆளுநருக்கு நேரடியாக நிதித்தேவை குறித்து அறிவிக்கும் நடைமுறை இல்லை எனவும் எஸ்.ஆர். ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கடன் செலுத்துவதற்காக, 33.64 பில்லியன் ரூபா தேவையாக இருந்ததுடன், அரச கடன் திணைக்களம் அந்த மாதத்தில் மாத்திரம் மொத்தமாக 60.91 பில்லியன் ரூபா கடனைப் பெற்றிருந்தது.
இதில் 28.38 பில்லியன் ரூபா முறிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தது.
மேலதிகமாக 8.28 பில்லியன் ரூபா இருந்ததாகவும் எவ்வித நிதித்தட்டுப்பாடும் இருக்கவில்லை எனவும் திறைசேரியின் பிரதி செயலாளர் ஆட்டிகல, ஜனாதிபதி ஆணைக்குழுவில் அறிவித்துள்ளார்.