நீண்ட காலமாக வழக்கு தாக்கல் செய்யப்படாதுள்ள அனைத்து கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைச்சரவையிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அநுராதபுரத்தில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்த போராட்டம் இன்று 17 ஆவது நாளை எட்டியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூன்று கைதிகள் அநுராதபுரம் சிறைச்சாலையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு வெவ்வேறு காலப்பகுதியில் வவுனியாவில் கைது செய்யப்பட்ட மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுறை திருவருள் ஆகியோரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் அநுராதபுரம் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் ஒருவருக்கு சேலைன் வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்தார்.
மற்றொரு கைதி தொடர்ந்தும் சிறைக்கூடத்திற்குள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமது வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி குறித்த மூன்று கைதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துவதற்காக அணி திரளுமாறு தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்ட 19 அமைப்புக்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த அமைப்புக்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புலொட் எனப்படும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் கையொப்பமிட்டுள்ளன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
போரின் இறுதி நாள் வரை ஆயுதங்கள் தாங்கிப் போராடிய பல மூத்த போராளிகள் உட்பட 12,000 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் குறுகிய காலத் தடுப்பிற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டமை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 132 பேரை மாத்திரம் தொடர்ந்தும் சிறைகளில் அடைத்திருப்பதானது எவ்வித சட்ட அர்த்தமும் இல்லாத ஒரு செயற்பாடு என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பங்காளிகளாக மாறி, அனைத்து விடயங்களிலும் அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருந்து, பாராளுமன்ற செயற்பாடுகள் அனைத்திலும் அரசாங்கத்தை நியாயப்படுத்தி ஆதரிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும் என்ற நிலையிலும் அரசாங்கத்தை சங்கடப்படுத்தக்கூடாது என்பதற்காகவும் அரசாங்கத்துடனான தமது உறவுகள் பாதிப்புறக்கூடாது என்பதற்காகவும் காலத்தைக் கடத்தி வருவதாக 19 அமைப்புக்களின் பிரதிநிதிகள் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (13) வட மாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பினை மேற்கொள்வதற்கு முன்வருமாறு அனைத்து தரப்பினருக்கும் குறித்த அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
இதனிடையே, தமிழ் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவையில் பிரஸ்தாபித்ததாக அமைச்சரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து அமைச்சர் விளக்கியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட்சியங்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து இவர்களுக்கு எதிரான வழக்கை அநுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் எடுத்த முடிவு நியாயமானது அல்லவென அமைச்சர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
சாட்சிகளின் தேவை கருதி வழக்குகள் இடமாற்றப்படுவது ஏற்புடையதல்ல என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் சட்ட மா அதிபரிடம் விளக்கம் கோரி தீர்வு காண்பதாக ஜனாதிபதி தன்னிடம் உறுதியளித்ததாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது