Monday, October 9, 2017

How Lanka

எண்ணெய் வகையான இரசாயன பதார்த்தம் மூலம் டெங்கு நுளம்பை அழிக்க திட்டம்


டெங்கு ஒழிப்பிற்கு புதிய இரசாயன பதார்த்தத்தை பயன்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

குறித்த இரசாயன பதார்த்தத்தினூடாக டெங்கு குடம்பிகள், நுளம்புகளாக விருத்தியடைவதற்கு தேவையான ஒட்சிசனை பெறுவதை தடுக்க முடியும் என சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, எண்ணெய் வகையான இரசாயன பதார்த்தம் ஒன்றை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த இரசாயனத்தை நீர்தேங்கும் இடங்களில் இடும் போது படலமாக பரவி நீருக்குள் ஒட்சிசன் செல்வதை தடுக்கும் எனவும் டொக்டர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த இரசாயனப் பதார்த்தம் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டெங்கு ஒழிப்பு தொடர்பில் அவுஸ்திரேலியாவின் மொனேஷ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆய்வுகளை இலங்கையில் செயற்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலைக் காரணமாக டெங்கு நுளம்புகள் அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 390 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், 150,000 இற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.