ஈரான் மற்றும் ஈராக்கிடையே அமைந்துள்ள வடக்கு எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 348 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7000 பேருக்கும் மேற்பட்டவர்கள் வரையில் காயமடைந்துள்ளனர்
இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் செய்தி வௌியிட்டுள்ளது.
மேற்கு ஈரானின் கெர்மன்ஷா மாகாணத்தில் மாத்திரமே சுமார் 200 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 2500 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஈராக்கில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வௌியிடப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிசக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளமையினால் தொடர்ச்சியாக மீட்புப் பணிகளை முன்னெடுக்கமுடியாத நிலை காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் வடகிழக்கு எல்லைக்கு அருகில் உள்ள ஹலாபஜாவின் தென்மேற்கிலிருந்து 19 மைல்கள் தொலைவில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
33.9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், துருக்கி, இஸ்ரேல் மற்றும் குவைத்திலும் குறைந்தளவிலான நிலஅதிர்வு உணரப்பட்டது.