Monday, November 13, 2017

How Lanka

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நாளை மறுதினம் இலங்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளது

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்று வரும் 28 ஆவது காலக்கிரம மீளாய்வு செயற்குழுக் கூட்டத்தில் நாளை மறுதினம் இலங்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இதன்போது பல சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பிலான கேள்விகளை எழுப்பவுள்ளன.

அமெரிக்கா,பிரிட்டன்,ஜெர்மனி, நோர்வே போர்த்துக்கள் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான கேள்விகளை எழுப்பவுள்ளன.

இலங்கை தொடர்பில் அந்ததந்த நாடுகள் எழுப்பவுள்ள கேள்விகளை ஏற்கனவே அந்த நாடுகள் வழங்கியுள்ளதுடன் அந்தக் கேள்விகளை ஐ.நா மனித உரிமை பேரவை தமது உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் பிரசுரித்துள்ளது.

அதனடிப்படையில் அமெரிக்கா முன்வைத்துள்ள கேள்விகள் வருமாறு :-

  1. மனித உரிமை மீறல்கள் குறித்து இராணுவம் மற்றும் அதிகாரிகள் பொறுப்புக் கூறாமல் இருப்பது தொடர்பில் தாம் அதிருப்தி அடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
    எனவே மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் எப்போது நீதியான மற்றும் நம்பகரமான விசாரணைகளை முன்வைக்கும்?
  2. இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் எப்போது நீக்கும்?
  3. அரசியலமைப்பு செயற்பாடுகள் தாமதமடைவதாக அறியக்கிடைப்பதாகவும் அரசாங்கம் இதனை எவ்வாறு முன்கொண்டு செல்லும் எனவும் அமெரிக்கா வினவியுள்ளது.
  4. பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் எவ்வாறான செயற்பாடுகளை எடுத்துள்ளது? காணியை திருப்பி வழங்காத மக்களுக்கு எவ்வாறு நட்ட ஈடு வழங்கப்படும்? போன்ற பல கேள்விகளை அமெரிக்கா இலங்கையிடம் முன்வைத்துள்ளது.
பிரிட்டன்
  1. ஜெனீவா பிரேரணையின் பிரகாரம் அரசாங்கம் எப்போது பொறுப்புக் கூறல் விசாரணை பொறிமுறையை முன்னெடுக்கும்?
  2. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரிட்டன் இலங்கை அரசாங்கத்திடம் வினவியுள்ளது.
ஜேர்மன்
  1. பயங்கரவாத தடைச் சட்டம் இலங்கையில் எப்போது நீக்கப்படும் என ஜேர்மனும் கேள்வி எழுப்பியுள்ளது?
  2.  பலவந்தமாக காணாமற்போனவர்கள் தொடர்பிலான சர்வதேச சாசனம் தொடர்பிலான சட்டம் எப்போது கொண்டுவரப்படும்?
  3. காணாமற்போனவர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான பட்டியல் அரசாங்கத்திடம் இருக்கிறதா?
  4. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வறுமையை நீக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? போன்ற கேள்விகளை ஜேர்மன் முன்வைத்துள்ளது.
சுவிட்சர்லாந்து
  1. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக 2015 ஆம் ஆண்டு அரசாங்கம் வாக்குறுதி அளித்தாலும் அது ஏன் இன்னும் நிறைவேற்றப்படவில்லையெ சுவிட்சர்லாந்து இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
     
  2. காணாமற்போனோர் அலுவலுகம் எப்போது செயற்பாட்டிக்கு வரும்?
    காலக்கிரம மீளாய்வு பொறிமுறையின் கீழ் ஐக்கிய நாடுகளில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து நாடுகளினதும் மனித உரிமை விவகாரங்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் மூன்று செயற்குழு அமர்வின் போது மீளாய்வு செய்யப்படுகிறது.
    அதன் பிரகாரம் வருடமொன்றில் 42 நாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படுகிறது.

    அந்த வகையில் இலங்கையின் மனித உரிமை உரிமை நிலமை தொடர்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் முதலாவது தடவையாகவும், 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது தடவையாகவும் மீளாய்வு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.