கின்னஸ் சாதனை படைப்பதற்காக ஒரே மேடையில் 85 மொழிகளில் பாடல்கள் பாட 12 வயது இந்திய சிறுமி முயற்சி மேற்கொண்டுள்ளார்.
துபாயில் உள்ள இந்தியன் உயர்நிலைப் பள்ளியில் 7வது படித்துவரும் சுஜிதா சதீஷ் என்ற கேரளாவை சேர்ந்த சிறுமி, இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வரும் டிசம்பர் 29ம் தேதி துபாயில் நடத்த திட்டமிட்டுள்ள இவரது சாதனை முயற்சியில் தமிழ், மலையாளம், இந்தி, ஜப்பான், பிரெஞ்ச், ஹங்கேரியன், ஜெர்மன் உள்ளிட்ட 85 மொழிகளில் பாடல் பாட இவர் திட்டமிட்டுள்ளார்.
சுஜிதாவுக்கு இப்பொழுதே 80 மொழிகளில் பாட தெரியும். நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாக மேலும் 5 மொழிகளில் பாடுவதற்கு பயிற்சி எடுத்து வருகிறார்.
தனது சாதனை முயற்சி குறித்து சுஜிதா கூறுகையில், ‘‘தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் எனக்கு பாடத் தெரியும், என்றாலும், நான் முதன்முதலில் பாடல் பாடிய வெளிநாட்டு மொழி ஜப்பனீஸ்தான்.
கடந்த வருடத்தில் துபாயில் உள்ள என்னுடைய வீட்டிற்கு வந்த அப்பாவின் தோழி, ஜப்பான் மொழியில் ஒரு பாடல் பாடினார். அதில் மயங்கி அந்த மொழியை அவரிடம் கற்றேன்’’ என்றும் கூறியுள்ளார்.