Tuesday, November 7, 2017

How Lanka

வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோலை விநியோகிக்க தீர்மானம்


பெற்றோலை பெற்றுக் கொள்ளும் நிலமை வழமைக்கு திரும்பும் வரை, இன்று முதல் வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோலை விநியோகிப்பதற்கு பெற்றோலிய வளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கான சுற்றுநிரூபத்தை இன்று வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

கொள்கலன் மற்றும், போத்தல்களுக்கு பெற்றோலை விநியோகிக்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 9 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறினார்.

இதற்காக பொலிஸாரின் ஒத்துழைப்பும் நாடியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


வழமை போன்று பெற்றோல் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், இன்றும் சில பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக கொழும்பின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மக்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருப்பதாகவும் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

ஐ.ஓ.சி நிறுவனம் இறக்குமதி செய்த தரமற்ற பெற்றோல் தொகை, திருப்பியனுப்பட்டதை தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாளை மறுதினம் முதல், போதுமானளவு பெற்றோலை விநியோகிக்க முடியும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பெற்றோலிய வளத்துறை அமைச்சு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.