Saturday, November 18, 2017

How Lanka

யாழ். குடாநாட்டில் புவியியல் மாற்றங்கள்


யாழ். குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்த அடைமழை காரணமாக புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக புவியியல் பிரிவு பேராசிரியர்களை மேற்கோள் காட்டி, இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அடைமழைக்கு முந்திய காலப்பகுதி மற்றும் பிந்திய காலப்பகுதியில் கடல் பகுதியில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த சில தினங்களில் யாழ்.குடாவை சூழவுள்ள கடற்பரப்பில் மாற்றம் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பிரதேசங்களின் கடல் மட்டம் அதிகரித்து காணப்படுவதுடன், சில பிரதேசங்கள் கடல் நீரினால் மூழ்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ள போதும், மழை இல்லாத நேரங்களில் அந்த நீர் வற்றிப் போகாத நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


குடாநாட்டின் நிலப்பரப்பு கடலுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

யாழ். குடாநாடு விரைவில் முழுமையாக கடலில் மூழ்கும் என காலம் சென்ற பேராசிரியர் ஒருவர் எச்சரித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதா என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என யாழ். பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். குடாநாட்டின் புவியியல் மாற்றம் தொடர்பில் தற்போது வெளியாகும் தகவல்களினால், அந்தப் பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.